தொழில் தொடங்க ரெடியா! ரூ.1.5 கோடி வரை கடன் வழங்கும் தமிழ்நாடு அரசு - முழு விவரம்
புதிதாக தொழில் தொடங்கும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினத்தவரை ஊக்குவிக்கும் வகையில் கடன் மானியத்திட்டத்தை தமிழ்நாடு அரசு நடப்பு பட்ஜெட்டில் அறிவித்தது.
அதன்படி, ஆதிதிராவிட பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1.5 கோடி வரை கடன் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டது.
அது என்ன திட்டம்?
கடந்த மே மாதம் அறிவித்த இந்தத் திட்டத்திற்கு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்று தமிழ்நாடு அரசு பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை நடத்தும் இந்த திட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமுதாயங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர் பயன்பெற முடியும்.
Getty images
தொழில் முனைவோருக்கு கிடைக்கும் பலன்கள்
இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எவ்விதமான புதிய தொழில் துவங்கவும் கடன் பெற முடியும். ஆனால், நேரடி வேளாண்மைக்காக இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற முடியாது.
தொழில் தொடங்கப்படும் மதிப்பீட்டில் வழங்கப்படும் 35 சதவீத முதலீட்டு மானியத்தில், அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். மொத்த திட்டத்தில் 65 % வங்கிக் கடனாகவும், மீதமுள்ள 35 % அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும்.
Getty images
அதுமட்டுமல்லாமல், வங்கியில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 6% வட்டியை அரசே வங்கியில் செலுத்திவிடும். இதற்காக, நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசு ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது.
தகுதியானவர்கள் யார்?
* பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினத்தவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்
* தனி நபர்கள், முழு உரிமை கொண்ட தனியுரிமையாளர், பங்குதாரர் கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் பயன்பெறலாம்
* குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதும் இல்லை. 18 முதல் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* புதிய தொழில்கள் தொடங்கினாலோ அல்லது ஏற்கெனவே இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்தாலோ இதன் மூலம் மானியம் பெறலாம்.
Getty images
விண்ணப்பிக்க தேவையானவை
இதற்கு பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ், பள்ளி பதிவுத்தாள், குடும்ப அட்டை, குடும்ப அட்டை இல்லாதவர்கள் தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இருக்க வேண்டும்.
தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை (புராஜக்ட் ரிப்போர்ட்) அசல் மற்றும் நகல் Quotation ,GST எண்ணுடன் உள்ள அசல் மற்றும் நகல் Quotation, சாதிச் சான்றிதழ், உறுதிமொழிப் பத்திரம் நோட்டரி பப்ளிக்கிடம் கையெழுத்து வாங்கியது ஆகியவை வேண்டும்.
Getty Images
இதற்கு விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு வழங்கும் இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
https://msmeonline.tn.gov.in/aabcs/ என்ற இணையதளதிற்கு சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதில், புதிய விண்ணப்பம் என்ற தேர்வில் சென்று புதிய கணக்கை தொடங்கி, தங்களது தகவலை அளித்து விண்ணப்பிக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |