தன்பாலின திருமணம் 'இந்தியாவுக்கு ஒத்து வராது'., மத்திய அரசு எதிர்ப்பு
'இந்திய குடும்ப கட்டமைப்புக்கு ஒத்து வராது' என கூறி உச்ச நீதிமன்றத்தில் தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு
தன்பாலின திருமணத்திற்கு (Same-Sex Marriage) மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஓரினச்சேர்க்கை மற்றும் ஒரே பாலின உறவை இந்திய குடும்பம் என்ற கருத்துடன் ஒப்பிட முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுவை எதிர்த்து மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள அமைப்பு எதிர் பாலினத்தவர்களுக்கிடையேயான திருமணம். இதற்கு சட்ட தலையீடு செய்து இடையூறு செய்யக்கூடாது என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
சிறப்புத் திருமணச் சட்டம்
சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் தன்பாலினத் திருமணங்களைச் செல்லுபடியாக்கக் கோரி இரண்டு ஓரினச்சேர்க்கை தம்பதிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீது மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
பதிவு திருமணத்தில் உள்ள சிக்கலில் தத்தெடுப்பு, வாடகைத் தாய் முதல் வங்கிக் கணக்குகளை ஒன்றாகத் திறப்பது வரை அனைத்தையும் பாதிக்கிறது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
திருத்தம் செய்ய கோரிக்கை
சிறப்பு திருமணச் சட்டத்தில் பாலின வேறுபாடு இல்லாத வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரசியலமைப்பின் பாதுகாப்புகள் மற்றும் உரிமைகள் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்றும் அவை அனைத்து பாலினத்தவர்களையும் பாதுகாக்கின்றன என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.