ட்விட்டரில் கவனம் செலுத்தாமல் விளையாட்டை பாருங்க! இந்திய வீரருக்கு தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் அறிவுரை
இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து வருத்தம் தெரிவித்த ராகுல் திவாட்டியாவுக்கு, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக அயர்லாந்துடன் டி20 தொடரில் விளையாட உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஆல்ரவுண்டர் வீரர் ராகுல் திவாட்டியாவின் பெயர் இடம்பெறவில்லை.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம் பெறுவோம் என அவர் நம்பியிருந்த நிலையில், அயர்லாந்து தொடரில் இடம்பெறாததால் வருத்தமடைந்தார். இதனால் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்பார்ப்புகள் வலியை தருகின்றன என திவாட்டியா பதிவிட்டிருந்தார்.
Photo Credit: BCCI/IPL/ANI Photo
இந்த நிலையில், திவாட்டியாவுக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் அறிவுரை வழங்கியுள்ளார். அவர், 'உங்களிடம் நிறைய திறமைகள் இருக்கின்றன. ஆனால் இந்திய அணியில் தெரிவு செய்யப்படுவது கடினமாக உள்ளது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும், கேப்டன் ரோகித் சர்மாவும் அவுஸ்திரேலியாவின் நிலையை பார்த்து வீரர்களை தெரிவு செய்யும் நிலையில் உள்ளனர்.
நீங்கள் ட்விட்டரை விடுத்து உங்கள் திறமையில் கவனம் செலுத்துங்கள். அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் தேசிய அணியில் விளையாடுவீர்கள், உங்களை யாரும் வெளியேற்ற முடியாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: Philip Brown/Popperfoto via Getty Images
மேலும், இந்தியாவில் ஏராளமான திறமையான வீரர்கள் இருப்பதால், தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் வீரர்களை தெரிவு செய்ய சிரமப்படுவதை புரிந்துகொள்வதாகவும் குறிப்பிட்டார்.