பிரித்தானிய அரசுக்கு கடன் கொடுத்த இந்தியர்: வட்டியுடன் திருப்பிக் கேட்கும் பேரன்
பிரித்தானியா இந்தியாவை ஆண்ட காலத்தில், தன் தாத்தா பிரித்தானிய அரசுக்குக் கொடுத்த கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கக் கோரி, பிரித்தானியா மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார் இந்தியர் ஒருவர்.
தாத்தா கொடுத்த கடனை திருப்பிக் கேட்கும் இந்தியர்
பிரித்தானியா இந்தியாவை ஆண்ட காலத்தில், முதல் உலகப்போர் நடைபெற்றபோது, பிரித்தானிய அரசுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டுள்ளது.
1917ஆம் ஆண்டு, மத்தியப்பிரதேசத்திலுள்ள சேஹோர் என்னுமிடத்தைச் சேர்ந்த சேத் ஜும்மா லால் ருதியா என்னும் வர்த்தகரை அணுகி அவரது உதவியை நாடியுள்ளார்கள் பிரித்தானிய அதிகாரிகள்.

சேத், பிரித்தானிய அரசு நிர்வாகத்துக்கு 35,000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார். பதிலுக்கு, கடனைத் திருப்பிக் கொடுப்பதாக வாக்களித்து ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்துள்ளார்கள் அதிகாரிகள்.

1937ஆம் ஆண்டு சேத் மரணமடைய, கடன் தொடர்பான அந்த ஆவணங்கள் அவரது மகனிடமும், பின் அவரது பேரனான விவேக் ருதியாவையும் வந்தடைந்துள்ளன.
சமீபத்தில் குடும்ப உறுப்பினர்கள் பலர் சேர்ந்து பழைய விடயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது, அந்தக் கடன் குறித்த பேச்சு எழுந்துள்ளது.
அப்போது, அந்தக் கடன் தொடர்பான ஆவணங்களை விவேக் எடுத்துப் பார்க்க, தன் தாத்தா பிரித்தானிய அரசுக்கு 35,000 ரூபாய் கடன் கொடுத்த விடயம் மீண்டும் பேசுபொருளாக, பிரித்தானிய அரசுக்கு தன் தாத்தா கொடுத்த கடனை சட்டப்படி திருப்பிக் கேட்க திட்டமிட்டுவருவதாக தெரிவித்துள்ளார் விவேக்.
விடயம் என்னவென்றால், 1917ஆம் ஆண்டு கடனாக கொடுக்கப்பட்ட 35,000 ரூபாயின் மதிப்பு, இன்றைய நிலவரப்படி இந்திய மதிப்பில் 1.85 கோடி ரூபாய் ஆகும்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |