கனடாவில் 87 வயதில் இலங்கைத் தமிழ்ப் பெண்மணி படைத்துள்ள சாதனை
கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ்ப்பெண்மணி ஒருவர், தனது 87ஆவது வயதில் முதுகலைப்பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இலங்கையிலுள்ள வேலணை என்ற கிராமத்தில் பிறந்தவர் வரதா ஷண்முகநாதன் (Varatha Shanmuganathan).
இந்தியாவுக்குச் சென்று, மதராஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற வரதா, இலங்கைக்குத் திரும்பி ஒரு ஆசிரியையாக பணியாற்றிவந்துள்ளார். பின்னர் சிலோன் பல்கலைக்கழகத்தில் diploma in education என்னும் பட்டயப்படிப்பை முடித்த அவர், தனது 50ஆவது வயதில் லண்டன் பல்கலைக்கழகத்தில் தன் முதல் முதுகலைப்பட்டத்தைப் பெற்றுள்ளார்.
2004ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்த வரதா, 2019ஆம் ஆண்டு யார்க் பல்கலைக்கழகத்தில் மற்றொரு முதுகலைப் பட்டப் படிப்பிற்காக விண்ணப்பிக்க, பல்கலைக்கழகமும் அவரை இருகரம் நீட்டி வரவேற்றுள்ளது.
தனது 85ஆவது வயதில், தனது இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பைத் துவக்கியுள்ளார் வரதா. அவரது ஆய்வின் கருப்பொருள், உள்நாட்டு யுத்தத்துக்குப் பிந்தைய இலங்கையின் நிலை சார்ந்ததாகும்.
தனது பேரக்குழந்தைகளின் வயதுள்ள பிள்ளைகளுடன் வரதா தானும் ஒரு சிறுபிள்ளைபோல் கல்வி கற்கச் செல்ல, அப்போதுதான் இந்த கொரோனா பரவல் பிரச்சினை பெரிதாகியுள்ளது.
ஆகவே, ஒன்ராறியோவில் அமைந்துள்ள தன் மகள், மருமகன், பேரக்குழந்தைகள் வாழும் வீட்டில், ஜூம் வாயிலாக இன்லைன் மூலம் கல்வி பயின்றுள்ளார் வரதா.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அரசியல் அறிவியலில் தனது இரண்டாவது முதுகலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார் வரதா.
பட்டம் பெற்ற வரதா, இக்கால இளைஞர்களுக்கு அளிக்கும் செய்தியாக, வேலைக்கு செல்லவேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் கல்வி கற்காதீர்கள், கல்வி உங்கள் வாழ்வை மாற்றுவதாக இருக்கவேண்டும். உங்களைக் குறித்தே நினைத்துக்கொண்டிருக்காமல், உங்கள் நாட்டைக் குறித்தும், உலகத்தில் விவாதிக்கப்படும் பிரச்சினைகள் குறித்தும் எண்ணிப்பாருங்கள் என்கிறார்.
கொஞ்சமும் தளராமல், ஓயாமல் படிப்பு படிப்பு என்றிருந்த வரதா, அடுத்ததாக புத்தகம் ஒன்றை எழுத இருக்கிறாராம்.
வரதா, யார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களிலேயே வயது முதிர்ந்த பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.