அவுஸ்திரேலிய இளைஞருக்கு வீடு திரும்ப விலக்கு அளித்த சுகாதாரத்துறை: வெளியான பின்னணி
தனது சகோதரியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு கான்பெர்ராவில் சிக்கி தவித்த அடிலெய்ட் நபருக்கு வீடு திரும்புவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மகப்பேறு நேரத்தில் ஏற்பட்ட சிக்கலால் அக்டோபர் 1ம் திகதி அடிலெய்ட் பகுதியை சேர்ந்த Idris Martin என்பவரது சகோதரி மரணமடைந்தார். இவரது பிஞ்சு குழந்தை பிறந்து 7 நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது.
கான்பெர்ராவில் நடந்த இவர்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்ற Idris Martin ஊரடங்கால் அங்கேயே சிக்கிக்கொண்டார். தெற்கு அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் தமது குடும்பம் இந்த துக்கத்தை ஒன்றாக அனுசரிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
ஆனால் அதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாக தற்போது கான்பெர்ராவில் இருந்து அடிலெய்ட்கு செல்ல Idris Martin என்பவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தென் அவுஸ்திரேலிய சுகாதாரத்துறை விலக்கு அளித்துள்ள நிலையில், அந்த ஒப்புதல் கடிதத்தை தென் அவுஸ்திரேலியா பொலிசாருக்கு சமர்ப்பிக்கப்பட்டு அவர்கள் 20 நிமிடங்களில் அனுமதி அளித்துள்ளதாக Idris Martin தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை ஊருக்கு செல்ல உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். ஊடகத்தில் தமது குடும்ப சோகத்தை வெளியிட்டு, அரசின் உதவியை நாடியது தமக்கு ஏற்புடையதாக இல்லை என்றே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், சூழல் தம்மை அவ்வாறு முடிவெடுக்க வைத்துள்ளது என்றார். தற்போதும் தென் அவுஸ்திரேலிய மக்கள் சுமார் 8,000 பேர்கள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக ஊர் திரும்ப முடியாமல் வேறு மாகாணங்களில் சிக்கியுள்ளனர்.
சிறப்பு விலக்கு அளிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.