வாழ்க்கைத்தரத்தில் சிறந்து விளங்கும் சுவிட்சர்லாந்து இந்த விடயத்தில் மோசம்... ஆய்வு
வெளிநாடுகளில் வாழும் மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, சுவிட்சர்லாந்து குறித்த இரண்டு நேரெதிரான குணாதிசயங்களை வெளிக்கொணர்ந்துள்ளது. 59 நாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு, வாழ்க்கைத்தரத்தில் சுவிட்சர்லாந்து முன்னணியில் உள்ள அதே நேரத்தில், விலைவாசியில் மோசமான இடத்தை வகிப்பதாக தெரியப்படுத்தியுள்ளது.
InterNations என்ற அமைப்பு மேற்கொண்ட அந்த ஆய்வில், சுவிட்சர்லாந்து வெளிநாட்டவர்களைக் கவர்வதில் 59 நாடுகளில் 30ஆவது இடத்தை வகிப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், சுவிட்சர்லாந்து குறித்த விடயங்களில் நல்ல விடயங்களும் உள்ளன, மோசமான விடயங்களும் உள்ளன.
வாழ்க்கைத்தரத்தைப் பொருத்தவரை, சுவிட்சர்லாந்து 9ஆவது இடத்தில் உள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 99 சதவிகிதத்தினரும் சுவிட்சர்லாந்தின் இயற்கைச்சூழல் தங்களுக்குப் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த விடயத்தில் நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்தின் அமைதிக்கு 95 சதவிகிதத்தினரும், சுகாதாரத்துக்கு 95 சதவிகிதத்தினரும், காற்று தூய்மைக்கு 89 சதவிகிதத்தினரும், போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு 96 சதவிகிதத்தினரும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு 91 சதவிகிதத்தினரும் வாக்களித்துள்ளனர்.
பெரும்பாலானோர் (85%) சுவிட்சர்லாந்தின் வலிமையான பொருளாதாரம் அதை பணியாற்ற உகந்ததாக ஆக்குவதாகவும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், விலைவாசி மற்றும் வெளிநாட்டு மக்களை மனதார ஏற்றுக்கொண்டு இணைந்துவாழ்தல் ஆகிய விடயங்களில் சுவிட்சர்லாந்து மோசமான மதிப்பெண்களையே பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாழும், குறிப்பாக பணியாற்றும் வெளிநாட்டினர், சுவிஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்து வாழ்வது கடினம் என்று தெரிவித்துள்ளனர்.
அந்த விடயத்தில் சுவிட்சர்லாந்து 52ஆவது இடத்தைத்தான் பெற்றுள்ளது. 28 சதவிகித வெளிநாட்டவர்கள், தாய்நாட்டிலிருப்பதுபோல் சுவிட்சர்லாந்தில் உணரமுடியவில்லை என்றும், 61 சதவிகிதத்தினர் உள்ளூர் மட்டத்தில் நண்பர்கள் கிடைப்பது கடினம் என்றும், 52 சதவிகிதத்தினர், தங்களால் தங்களைப்போன்ற வெளிநாட்டவர்களுடன்தான் நட்பு வைத்துக்கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக, விலைவாசியைப் பொருத்தவரை, மோசமான நாடுகளில் 58ஆவது இடத்தை சுவிட்சர்லாந்தும், 59ஆவது இடத்தை ஹொங்ஹொங்கும் பிடித்துள்ளன. 65 சதவிகித வெளிநாட்டவர்கள், சுவிஸ் விலைவாசி திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளனர்.
குறிப்பாக, மருத்துவ வசதிக்கான செலவு எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும் ஒன்று
என 34 சதவிகிதத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.