ஜேர்மனியிலிருந்து இன்று நாடுகடத்தப்படும் ஒரு கூட்டம் வெளிநாட்டவர்கள்: திகிலில் உறைந்திருக்கும் ஒரு குடும்பம்
ஜேர்மனியிலிருந்து ஒரு கூட்டம் பாகிஸ்தானியர்கள் இன்று நாடுகடத்தப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அடுத்து தங்களுக்கு என்ன நேரிடுமோ என திகிலில் உறைந்துள்ளது ஒரு குடும்பம்.
அஹமதியா இஸ்லாமியர்கள் என்ற ஒரு பிரிவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஜேர்மனியில் வசித்து வருகிறார்கள்.
அஹமது, அவரது மனைவி சாஹர் கல்சூம் மற்றும் மூன்று குழந்தைகளைக் கொண்ட அந்த குடும்பம், இன்று ஒரு கூட்டம் பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை அறிந்து நடுக்கத்தில் இருக்கிறது.
அஹமதியா இஸ்லாமியர்கள், தங்களை இஸ்லாமியர்கள் என்று அழைத்துக்கொள்ள பாகிஸ்தானில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மசூதிகளில் இடம் கிடையாது. யாரிடமாவது அவர்கள் அசலாம் அலைக்கும் என்று கூறினால், அவர்களுக்கு மரண தண்டனைதான். அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாகத்தான் கருதப்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நிலையில், பள்ளிப்படிப்பைக் கூட படிக்க முடியாமல் ஒவ்வொரு பள்ளியாக அலைக்கழிக்கப்பட்டதால், சாஹர் கல்சூமால் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்க முடியவில்லை.
பிள்ளைகளுக்காவது நல்ல படிப்பும் எதிர்காலமும் அமையட்டும் என்றுதான் அவர்கள் ஜேர்மனிக்கு வந்தார்கள்.
ஆனால், ஜேர்மனி இந்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் நிலையில், ஜேர்மானியர்களை திருப்திப்படுத்துவதற்காக, தாங்கள் புலம்பெயர்தல் குறித்து கடுமையான ஒரு கொள்கையை கடைப்பிடிப்பதாக காட்ட முயற்சி செய்கிறது.
அதன் விளைவாக தற்போது அஹமதியா இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட இருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் நிலை? வாழ்வா சாவா என தெரியாமல், புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் என்ன செய்வோம் என்று தெரியாமல் பிள்ளைகளையும் கையில் பிடித்துக்கொண்டு திகிலடைந்துபோய் உட்கார்ந்திருக்கிறது அஹமதுவின் குடும்பம்.



