ரஷித் கான், திவாட்டியா அபாரம்: குஜராத் அணி திரில் வெற்றி
கடைசி பந்தில் ரஷித் கான் காட்டிய அதிரடியால் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ஐதராபாத் அணி முதலில் துடுப்பாட்டம் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வில்லியம்சன் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் சமி பந்துவீச்சில் வில்லியம்சன் போல்டானார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய திரிபாதி 16 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 42 பந்துகளில் 65 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
அவருடன் நிலைத்து நின்று ஆடிய மார்க்கரம் 40 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் தொடந்து சிக்சர்களை பறக்கவிட்டு ஜான்சென் - ஷஷாங்க் ஜோடி குஜராத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சமி 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாஹா முதலில் நிதானம் காட்டினாலும் பின்னர் அதிரடியை தொடங்கினார்.
ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அவர் பவுண்டரிகளாக விளாசினார். சுப்மன் கில் 22 ஓட்டங்களில் உம்ரன் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து வந்த பாண்டியாவும் 10 ஓட்டங்களில் வெளியேறினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாஹா 28 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் ஒரு கட்டத்தில் குஜராத் அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் குவித்து இருந்தது.
சிறப்பாக விளையாடிய சாஹா 38 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மில்லர், அபினவ் மனோகர் அடுத்தடுத்து உம்ரான் மாலிக் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் பிறகு ஜோடி சேர்ந்த திவாட்டியா - ரஷித் கான் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினர்.19-வது ஓவரில் திவாட்டியா சிக்சர் பவுண்டரிகளாக பறக்க விட கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
முதல் பந்தில் சிக்சர் விளாசிய திவாட்டியா பின்னர் ஒரு ரன் எடுக்க ரஷித் கான் ஸ்ட்ரைக்கில் வந்தார். 3 சிக்சர்களை விளாசிய அவர் கடைசி பந்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வெற்றி பெற செய்தார்.