கோலி அணியை காலியாக்கிய திவாட்டியா.. குஜராத் மிரட்டல் வெற்றி!
மும்பையில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய பெங்களூரு அணி, கோலி மற்றும் பட்டிடார் ஆகியோரின் அரைசதத்தினால் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் அணி தரப்பில் சங்வான் 2 விக்கெட்டுகளையும், ஷமி, அல்சாரி ஜோசப், ரஷித் கான் மற்றும் பெர்குசன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய குஜராத் அணியில் கில் 31 ஓட்டங்களும், சஹா 29 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் ஹர்திக் பாண்ட்யா 3 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். சாய் சுதர்சனை 20 ஓட்டங்களில் ஹசரங்கா வெளியேற்றினார்.
எனினும், டேவிட் மில்லர்-திவாட்டியா கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. கடைசி கட்டத்தில் விஸ்வரூபமெடுத்த திவாட்டியா, ஹேசல்வுட் ஓவரை தவிடுபொடியாக்கி குஜராத்தை வெற்றி பெற வைத்தார். அவர் 25 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் விளாசினார். மில்லர் 24 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்தார்.
பெங்களூரு அணி தரப்பில் ஹசரங்கா, ஷாபாஸ் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் பெங்களூரு அணி தொடர்ச்சியாக 3வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மே 4ஆம் திகதி மோதவுள்ளது.