வழி விடச் சொல்லி ஹாரன் அடித்ததற்காக கொல்லப்பட்ட நகைக்கடை உரிமையாளர்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர், ஸ்கூட்டர் ஒன்றை வழிவிடச்சொல்லி ஹாரன் அடித்ததற்காக குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
வழி விடச் சொல்லி ஹாரன் அடித்த நகைக்கடை உரிமையாளர்
வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில், நகைக்கடை உரிமையாளரான ஜத்தின் (Jatin Adesara, 33), தன் வீட்டில் நடக்கும் விழா ஒன்றில் கலந்துகொள்ள தன் உறவினர் ஒருவரை அழைத்துவருவதற்காக காரில் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, காருக்கு முன்னால் மெதுவாக சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றை வழிவிடச்சொல்லி ஹாரன் அடித்துள்ளார் ஜத்தின்.
ஆனால், அந்த ஸ்கூட்டரில் பயணித்த இளைஞர்கள் இருவரும் வழிவிடவே இல்லையாம். ஆகவே, ஜத்தின் தொடர்ந்து ஹாரன் அடிக்க, ஸ்கூட்டரை நடுவழியில் நிறுத்திய அந்த இளைஞர்கள், ஜத்தினை கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்கள்.
அத்துடன், அவரை காரிலிருந்து சட்டையைப் பிடித்து வெளியே இழுத்து தாக்கவும் செய்துள்ளார்கள் இருவரும்.
திடீரென அவர்களில் ஒருவர், கத்தி ஒன்றை எடுத்து ஜத்தினை சரமாரியாகக் குத்த, அவர் படுகாயமடைய, அவர்கள் இருவரும் தங்கள் ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுள்ளார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜத்தின், தன்னைத் தாக்கியவர்கள் மாறி மாறி அவர்கள் பெயர்களைக் கூறியதை கவனித்ததால், அது குறித்து தன் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் ஜத்தின் இறந்துவிட, பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் சம்பந்தப்பட்ட இளைஞர்களைத் தேடத் துவங்கியுள்ளார்கள்.
நேற்று, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் இருவரும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்களில் ஒருவர் விரைவில் 18 வயதை எட்ட உள்ள நிலையில், அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |