ரஷ்ய படையில் குஜராத் மாணவன்... காப்பாற்றக் கோரி உக்ரைனில் இருந்து வெளியிட்ட காணொளி
மாணவர் விசா மூலம் ரஷ்யா சென்ற குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், எந்தச் சூழ்நிலையிலும் ரஷ்ய இராணுவத்தில் சேர வேண்டாம் என்று ஒரு காணொளிச் செய்தி மூலம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாயகம் திரும்ப உதவுமாறு
போலியான போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து மிரட்டி, ரஷ்ய இராணுவத்தில் சேவையாற்ற தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

உக்ரைனியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், மாணவர் சாஹில் முகமது ஹுசைன், அங்கு பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளியில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
குஜராத்தின் மோர்பியைச் சேர்ந்த அவர், தன்னைத் தாயகம் திரும்ப உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவில் படிக்கும்போது ஒரு கூரியர் நிறுவனத்தில் பகுதி நேரமாகப் பணியாற்றி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய காவல்துறை தன்னை ஒரு போதைப்பொருள் வழக்கில் பொய்யாகச் சிக்க வைத்ததாகவும், தான் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றினால் வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதியளித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அண்மையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா வந்திருந்தார். பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக, புடினிடம் பேசுமாறு அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ஒப்பந்தம்
மேலும், போலி போதைப்பொருள் வழக்கிலிருந்து விடுபடுவதற்காக ரஷ்ய ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார். 15 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு, ரஷ்யர்கள் அவரை போர் களத்திற்கு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், முதல் நாளிலேயே தாம் உக்ரைன் படையிடம் சரணடைந்ததாகவும், அவர்களிடம் தமது நிலை குறித்து வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரேனியப் படைகள் அந்த வீடியோக்களை குஜராத்தில் உள்ள அவரது தாயாருக்கு அனுப்பி, ரஷ்ய இராணுவத்தில் சேருமாறு இந்தியர்கள் ஏமாற்றப்படுவதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில், தனது மகனைப் பத்திரமாக மீட்டுத் தருமாறு அவர் டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, ரஷ்ய ஆயுதப் படைகளில் இணைந்துள்ள இந்தியக் குடிமக்களை விடுவிப்பதற்காக இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும்,
மேலும் இதுபோன்ற ஆட்சேர்ப்புகளைத் தடுப்பதற்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி டிசம்பர் 5 அன்று தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |