அமெரிக்காவால் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர்... 250,000 டொலர் சன்மானம் அறிவிக்கப்பட்ட இந்தியர்
இந்திய நாட்டவரான பத்ரேஷ்குமார் சேதன்பாய் படேல், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.
சமையலறை கத்தியால்
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் தனது மனைவியைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது 34 வயதாகும் படேல் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.
அமெரிக்க மாகாணம் மேரிலாந்தின் ஹனோவரில் உள்ள ஒரு டன்கின் டோனட்ஸ் கடையில் சம்பவத்தின் போது அவர் பணிபுரிந்து வந்துள்ளார், அங்கு அவரது மனைவியும் பணிபுரிந்தார். ஏப்ரல் 2015 ல் வேலை நேரத்தில், படேல் தனது மனைவி பாலக்கை சமையலறை கத்தியால் பலமுறை குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து படேல் அங்கிருந்து மாயமாகியுள்ளார். ஆனால் பொலிசாரால் அவரை கைது செய்ய முடியாமல் போனது. இந்த வழக்கு விசாரணையில், அமெரிக்க வாழ்க்கையை கைவிட்டு இந்தியா திரும்ப வேண்டும் என பாலக் தமது கணவரிடம் கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு படேல் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், கத்திக்குத்து சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் படேல் தம்பதியின் விசா காலாவதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்பிச் சென்றிருக்கலாம்
மட்டுமின்றி, தமது மனைவி இந்தியா திரும்பினால், அது தமக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என படேல் நம்பியிருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடைசியாக படேல் நியூ ஜெர்சியில் உள்ள ஒரு ஹொட்டலில் இருந்து நியூவார்க் ரயில் நிலையத்திற்கு டாக்ஸியில் பயணித்ததாக அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர் அமெரிக்காவில் உறவினர்களுடன் மறைந்திருக்கலாம் அல்லது கனடாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் அல்லது இந்தியாவுக்குத் திரும்பியிருக்கலாம் என்று FBI சந்தேகிக்கிறது.
மிகவும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள படேலை கைது செய்ய உரிய தகவல் அளிப்பவர்களுக்கு 250,000 டொலர் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |