ஜேர்மனியில் பள்ளி அருகே 81 வயது முதியவர் துப்பாக்கி சூடு; இருவர் காயம்
ஜேர்மனியில் பள்ளி அருகே 81 வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச்சூடு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதியவர் துப்பாக்கிச் சூடு
ஜேர்மனியின் வடமேற்கு நகரமான பிராம்ஷேவில் (Bramsche) உள்ள ஆரம்பப் பள்ளிக்கு அருகில் 81 வயது முதியவர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்த சம்பவத்தில் ஒரு பதின்வயதினர் (16) பலத்த காயம் அடைந்தார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னையும் ஆயுதத்தால் படுகாயப்படுத்திக் கொண்டார் என Osnabrueck நகரின் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
PolishNews
அவர்கள் இருவரும் அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், "பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று அவர் உறுதிப்படுத்தினார்.
சம்பவம் பள்ளியுடன் தொடர்புடையது அல்ல
Martinusschule ஆரம்பப் பள்ளிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இருப்பினும், இது பள்ளியுடன் தொடர்புடையது அல்ல என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச்சூட்டில் தொடக்கப் பள்ளி பாதிக்கப்படவில்லை, எந்த நேரத்திலும் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று Osnabrueck காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தை சுற்றி வளைத்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜேர்மனியில் வன்முறைகள்
ஜேர்மனியில் துப்பாக்கி வன்முறைகள் அமெரிக்காவைப் போல பரவலாக இல்லை, ஆனால் சமீப காலங்களில் பல சம்பவங்கள் தலைப்புச் செய்திகளாக உள்ளன.
கடந்த ஆண்டு, ஜனவரி மாதம், ஜேர்மனியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றும் தாக்குதல்தாரி தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் மற்றும் பலர் காயமடைந்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு, பிராங்பேர்ட்டில் உள்ள பல்பொருள் அங்காடியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் இறந்து கிடந்தனர். இந்த சம்பவத்தில் 58 வயதுடைய ஒரு ஆண் முதலில் மளிகைக் கடையில் நுழைந்து ஒரு 53 வயதுடைய ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார், பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார்.