40 வயதாகி விட்டதா? குடலின் ஆரோக்கியம் என்னவாகும் தெரியுமா?
இரண்டாவது மூளை என்றழைக்கப்படும் குடல் மிக சிக்கலான கட்டமைப்பை கொண்டது, ஒவ்வொரு கிராம் குடலிலும் 100 பில்லியன் அதாவது 10,000 கோடி பக்டீரியாக்கள் இருக்கின்றன.
குடலானது நமது உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர், எனவே குடலை மிக ஆரோக்கியமான முறையில் நாம் பாதுகாப்பது அவசியமாகிறது.
உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவதே நல்ல குடலின் அடையாளம் என்கிறோம்.
அப்படியாக குடலின் செயல்பாடுகள் 40 வயதிற்கு மேல் எவ்வாறு இருக்கும் என்பதையும், அதை பாதுகாப்பாக வைத்திருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
40 வயதுக்கு மேல் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் மருத்துவ காரணிகள் குடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதுகுறித்து Dr. Ankur Jain அவர்கள் HTக்கு அளித்துள்ள நேர்காணலில்,
தாமதமான செரிமானம்
வயதாகும்போது, செரிமானப் பாதை வழியாக உணவு நகரும் விகிதம் குறைகிறது. இது வயிறு நிரம்பிய உணர்வு, வீக்கம் அல்லது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
செரிமானப் பாதையின் தசை தொனி குறைவதாலும், செரிமான நொதிகளின் சுரப்பு குறைவதாலும் உணவு உடைவதற்கு அதிக நேரம் எடுக்கிறது.
இதை சரிசெய்ய நார்ச்சத்து நிறைந்த உணவு, போதுமான நீரேற்றம் மற்றும் வழமையான எளிய உடற்பயிற்சிகள் அவசியமாகிறது.
அமிலச்சுரப்பு குறைதல்
வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவை உடைப்பதிலும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
40 வயதிற்குப் பிறகு, பலருக்கு வயிற்று அமில அளவு குறைகிறது, இது அஜீரணம், ஊட்டச்சத்து குறைபாடுகள் (குறிப்பாக பி12, இரும்பு மற்றும் கால்சியம்) மற்றும் குடல் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
சிறிய அளவில் காலஇடைவெளியில் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம்.
குடல் நுண்ணுயிர் சமநிலையின்மை
40 வயதுக்கு மேல் குடல் பக்டீரியாக்களின் சமநிலை குறைகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்படைய செய்வதுடன் செரிமான அமைப்பை சிக்கலாக்குகிறது. ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக் கொள்ளுதல், மோசமான உணவுபழக்கம் மற்றும் மன அழுத்தம் இதற்கு காரணமாக இருக்கலாம்.
புரோபயாடிக் மற்றும் ப்ரீபயாடிக் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இதனை சரிசெய்யலாம்.
உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் மூட்டுவலி போன்ற நோய்களுக்கு மருந்துகள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் குடலின் ஆரோக்கியம் பாதிப்படையலாம், எனவே மருத்துவரை கலந்தாலோசித்து மருந்துகளின் பக்கவிளைவுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |