ஹோலி கொண்டாட்டத்தில் கலர் பொடி பூச மறுத்ததால் இளைஞர் அடித்துக்கொலை
ஹோலி கொண்டாட்டத்தில் கலர் பொடி பூச மறுத்ததால் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோலி பண்டிகை
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி ஊர்வலம் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
இவ்வாறு ஊர்வலம் செல்லும் போது, மசூதிகள் மீது வண்ணக் கலவைகள் பட்டு கவலரம் ஏற்பட வாய்ப்புள்ளதால், முதல் முறையாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலிகர், பரேலி உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன.
சர்ச்சை பேச்சு
இந்நிலையில், பீகார் மாநில பாஜக எம்.எல்.ஏ Haribhushan Thakur Bachaul, இஸ்லாமியர்கள் ஹோலி அன்று வண்ணம் பூசினால் கோவப்பட கூடாது. இல்லையெனில் அன்று அவர்கள் வீட்டிலே இருக்க வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, ஹோலி பண்டிகையின் வண்ணங்களில் சிக்கல் இருந்தால், கதவுகளை அடைத்துக் கொண்டு இருக்க வேண்டாம். நாட்டை விட்டே வெளியேறலாம் என உத்திரப்பிரதேச மாநில அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இளைஞர் உயிரிழப்பு
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹோலி வண்ணப்பொடியை பூச மறுத்ததால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், தௌசா மாவட்டத்தில் ரால்வாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர், ஹன்ஸ்ராஜ் (25), போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி, கிராம நூலகம் ஒன்றில் அவர் படித்துக்கொண்டிருக்கும் போது, அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவரும் அங்கு வந்து ஹன்ஸ்ராஜ் மீது வண்ணப்பொடியை பூச முனைந்துள்ளனர்.
அதற்கு ஹன்ஸ்ராஜ் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மூவரும் அவரை உதைத்து, பெல்ட்டால் தாக்கியுள்ளனர். அதில் ஒருவர், ஹன்ஸ்ராஜின் கழுத்தை நெரித்ததில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மூவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர்.
இறந்த ஹன்ஸ்ராஜின் உடலுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் உறுதிமொழியை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |