எச்.ராஜாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் தற்போது நிறுத்திவைப்பு
பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவிற்கு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
கடந்த 2018 -ம் ஆண்டில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, பெரியார் சிலையை உடைப்பேன் என கூறியது மற்றும் திமுக எம்பி கனிமொழி குறித்து விமர்சனம் வைத்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது.
இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என எச்.ராஜா கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி ஜி.ஜெயவேல் வாசித்தார்.
அதில், எச்.ராஜா மீதான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவரது சமூக வலைதள பக்கத்தில் இருந்து இரு பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.
எனவே, எச், ராஜாவை குற்றவாளி என்றும், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், கால அவகாசம் வேண்டும் என்றும் எச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, ஹெச்.ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு சிறை தண்டனை நிறுத்தி வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், எச்.ராஜாவிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |