H-1B விசா என்பதே மிகப்பெரிய மோசடி... இந்தியர்களை குறிவைக்கும் அமெரிக்கா
அமெரிக்காவில் புலம்பெயர் மக்களின் வருகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து எடுத்து வரும் நிலையில், H-1B விசா என்பதே மிகப்பெரிய மோசடி என புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் அடையாளப்படுத்தியுள்ளார்.
மில்லியன் கணக்கான
அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து மலிவான வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த இது அனுமதிக்கிறது என்றும், இதனால் அமெரிக்க தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியர்கள் தொடர்பாக ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கூறிய அதே கருத்தையே அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் என்பவரும் முன்வைத்துள்ளார். H-1B விசா மற்றும் கிரீன் கார்ட் திட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்திருந்தார்.
இது அமெரிக்காவில் வசிக்கும் மில்லியன் கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை பாதிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. டிசாண்டிஸ் தெரிவிக்கையில், அமெரிக்காவில் நிறுவனங்களில் சில, அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்யும், அதே நேரத்தில் புதிய H-1B தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன மற்றும் ஏற்கனவே உள்ள H-1B விசாக்களை புதுப்பிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், H-1B விசாக்களைக் கைப்பற்றுபவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள் என குறிப்பிட்டுள்ள அவர், ஒரு குடிசைத் தொழில் போல அங்கே இது செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் 70 சதவீதம்
முன்னதாக, தற்போதைய H1B விசா முறை ஒரு மோசடி என்றும், இது வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்க வேலை வாய்ப்புகளை நிரப்ப அனுமதிக்கிறது என்றும் வர்த்தக செயலாளர் லுட்னிக் கூறியிருந்தார்.
அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க மக்களை வேலைக்கு அமர்த்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும், அந்த நிலை மிக விரைவில் திரும்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக H-1B விசா ஒதுக்கீட்டில் இந்தியர்கள் 70 சதவீத பங்கைக் கொண்டுள்ளனர். ஜனவரி மாதம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விதிகளை அமெரிக்கா ஏற்கனவே கடுமையாக்கத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |