இலங்கை, இந்தியாவுக்கு மேல் புள்ளிப்பட்டியலில் வங்காளதேசம்: தலைவர் ஹபிபுல் பஷர் பெருமிதம்
மரியாதையுடனேயே நாங்கள் தாயகம் திரும்புகிறோம் என வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவரான ஹபிபுல் பஷர், அவுஸ்திரேலியாவில் இருந்து மரியாதையுடன் தாயகம் திரும்பியுள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.
வங்காளதேச அணி
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய வங்காளதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடித்தது.

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்காளதேச அணி நான்காவது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து பேசிய வங்காளதேச தேர்வுக்குழுத் தலைவர் ஹபிபுல் பஷர் (Habibul Bashar), ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக தகுதிபெறும் வகையில் தங்கள் அணி நல்ல நிலையில் இருப்பதாக நம்புவதாக கூறுகிறார்.
ஹபிபுல் பஷர்
மேலும் அவர் கூறுகையில், "எங்களுக்கு இன்னும் 5 மிக முக்கியமான டெஸ்ட் போட்டிகள் உள்ளன; எனவே, அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல; பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய டெஸ்ட் போட்டிகள் அல்லது அதற்கு முந்தைய போட்டிகளைப் பார்த்தால், நாங்கள் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறோம்.
ஒரு டெஸ்ட் அணியாக நாங்கள் மிக சிறந்த அணியாக மாறிவிட்டோம் என்று இப்போதே என்னால் கூற முடியாது. நாங்கள் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்றே நான் கருதுகிறேன். ஆனால், நாங்கள் எங்களுக்கு என ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடிந்துள்ளது.
அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துத் திரும்பும்போது வங்காளதேசம் எடுத்துச் செல்லும் விடயம் ஒன்று உள்ளது; அது நாங்கள் இங்கு வருவதற்கு முன்பே பேசிய ஒன்றுதான். அதாவது தாயகம் திரும்பும்போது ஒரு குறிப்பிட்ட அளவிலான மரியாதையை தக்கவைத்துக் கொண்டு திரும்ப வேண்டும் என்பதுதான் அது. அந்த மரியாதையுடனேயே நாங்கள் தாயகம் திரும்புகிறோம் என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |