சுவிஸ் எல்லையில் சிக்கிய நபர்... விசாரணை அதிகாரிகளை அதிரவைத்த சம்பவம்
சுவிஸ்- ஜேர்மனி எல்லை நகரமான Singen-ல் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய நபரால் அதிகாரிகள் திகைத்துப் போயுள்ளனர்.
ஏப்ரல் மாத இறுதியில் சுவிஸில் இருந்து 44 வயதான ஒருவர் ஜேர்மனிக்கு சென்றுள்ளார். எல்லை நகரமான Singen-ல் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய அவரிடம் முன்னெடுத்த சோதனையில், அவரிடம் சுமார் 38 மில்லியன் யூரோ அளவுக்கான பண அத்தாட்சி பத்திரம் இருந்தது கண்டறியப்பட்டது.
ஆனால் தம்மிடம் பணம் ஏதும் இல்லை என அதிகாரிகளின் விசாரணையில் குறிப்பிட்ட அவரிடம் இருந்து, பல்வேறு ஆவணங்கள் சிக்கியது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே, 10,000 யூரோ தொகைக்கு அதிகமிருந்தால் மட்டுமே அத்தாட்சி பத்திரம் தேவை என்ற நிலையில், அந்த தொகை அவரால் எடுத்துச் செல்லலாம்.
ஆனால் குறித்த நபரிடம் அவர் கைவசமிருந்த அத்தாட்சி பத்திரத்தில் குறிப்பிட்ட தொகையானது அவரிடம் இல்லை என்பது சுங்க அதிகாரிகளுக்கு உறுதியானது.
மட்டுமின்றி அவர் வைத்திருந்த பத்திரங்களின் உண்மைத்தன்மையும் கேள்விக்குறியான நிலையில், விரிவான சோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.
குறித்த நபர் ஜேர்மனியில் ஏதேனும் தொழில் கூட்டாளியை இந்த போலியான பத்திரங்களால் ஏமாற்ற திட்டமிட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொலியான பத்திரங்கள் தொடர்பில் அவரிடம் விரிவாக விசாரிக்க, அவர் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு கடவுச்சீட்டு ஒன்றை சுங்க அதிகாரிகளிடம் காட்டி, தப்பிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அதுவும் போலியான கடவுச்சீட்டு என்பது தெரிய வர, அவரது உடமைகள் அனைத்தையும் சோதனையிட்டுள்ளனர். அதில், அந்த நபர் போலியான பல ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் அவர் மீது போலியான ஆவணங்கள் தயாரித்தல், தவறான தகவல் அளித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், அவரிடம் இருந்து மொத்த ஆவணங்களும் கடவுச்சீட்டுகளும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.