Hair Growth Foods: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்
இன்றைய சூழலில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல், இதற்காக கண்ட கண்ட செயற்கை ரசாயனங்கள் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துமே தவிர நிரந்தமான தீர்வளிக்காது.
முடி உதிர்தலுக்கு மிக இன்றியமையாதது ஊட்டச்சத்துள்ள உணவுகள், உள்ளிருந்து ஊட்டமளித்தால் மட்டுமே ஆரோக்கியமான அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
இதற்காக நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
முட்டை
உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பொருள் முட்டை, முட்டையின் வெள்ளைப்பகுதியில் உள்ள அல்புமின் என்ற புரதம் முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது, மேலும் முடி உதிர்வை கட்டுப்படுத்தும் பயோட்டின் என்கிற விட்டமினும் முட்டையில் உள்ளது.
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க செய்கிறது, இதில் உள்ள புரதம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
பசலைக்கீரை
இரும்புச்சத்து, விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த பசலைக்கீரை இரும்புச்சத்து குறைபாட்டுக்கு சிறந்த தீர்வாகும், இதனால் முடி உதிர்தல் தடுக்கப்படுகிறது, அத்துடன் முடிக்கு பளபளப்பையும் அளிக்கிறது.
ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ள பசலைக்கீரையை எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும், புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகள் உள்ளன. கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதுடன் கண்களுக்கும் நல்லது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
விட்டமின் ஏ குறைபாடும் முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாகும், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் விட்டமின் ஏ இருப்பதால் வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எப்போதும் இளமை தோற்றத்துடன் வலம்வர ஆசைப்படும் நபர்கள் கட்டாயம் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட வேண்டும், ஏனெனில் இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கக்கூடியது.
கேரட்
முடி வளர்ச்சி மட்டுமின்றி கண்களுக்கும் சிறந்தது கேரட், இதில் உள்ள பீட்டா கரோட்டின் சத்துக்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டுகின்றன, மேலும் தலைமுடியில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதுடன் குடல்புண்களை ஆற்றுகிறது, இதிலிருக்கும் விட்டமின் ஏ மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது.
நட்ஸ்
பாஸ்பரஸ், பொட்டாசியம், விட்டமின் இ, கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, போலேட் மற்றும் ஜிங்க் என அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த நட்ஸை தினமும் எடுத்துக்கொள்வதால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்,
பாதாம், வால்நட் போன்ற நட்ஸ்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம், இதில் முடி வளர்ச்சிக்கு தேவையான புரதம் நிறைந்திருக்கிறது, முடிக்கு உறுதியளித்து பளபளப்பையும் தரக்கூடியவை.