நாடு வறுமையில்... மனைவிக்கு 3.4 மில்லியன் டொலர்கள் செலவில் கனடாவில் மாளிகை: சர்ச்சையில் ஹெய்ட்டி நாடாளுமன்ற உறுப்பினர்
ஜனாதிபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சமீபத்தில் உலகின் கவனம் ஈர்த்த நாடு ஹெய்ட்டி (Haiti). ஹெய்ட்டியின் ஜனாதிபதியான Jovenel Moïse சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பில் தொடர்ந்து கைது சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.
இந்நிலையில், மீண்டும் ஒரு விடயத்துக்காக ஹெய்ட்டி கவனம் ஈர்த்துள்ளது. இம்முறை, அதன் பின்னணியில் இருப்பவர் ஹெய்ட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரோனி செலஸ்டின் (Rony Célestin, 46). ஹெய்ட்டி செல்வம் மிக்க ஒரு நாடு அல்ல. அதன் மக்களின் வருவாய் நாளொன்றிற்கு வெறும் 2.41 டொலர்கள் மட்டுமே.
அப்படியிருக்கும் ஒரு சூழலில், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான செலஸ்டின் என்பவர், தன் மனைவி Marie Louisa Célestinக்கு, கனடாவில் பங்களா ஒன்றை வாங்க பணம் கொடுத்திருக்கிறார்.
அவர் கொடுத்த தொகை கொஞ்சம் நஞ்சமல்ல, 3.4 மில்லியன் டொலர்கள்! ஒரு பக்கம் நாடு வறுமையில் தவிக்க, மறுபக்கம் கனடாவின் மொன்றியலில் செலஸ்டின் வாங்கியுள்ள 3.4 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான பங்களா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அது யாருடைய பணம், மக்கள் பணம்தானே என்கிறார்கள் அவரை எதிர்ப்பவர்கள். இல்லை, அது நான் சம்பாதித்த பணம் என்று கூறும் செலஸ்டினோ, தான் பல்வேறு தொழில்கள் செய்வதாக தெரிவிக்கிறார்.
தனக்கு 60 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய கோழிப்பண்ணை இருப்பதாகவும், தான் ஒரு FM நடத்தி வருவதாகவும், எரிவாயு நிறுவனம் வைத்திருப்பதாகவும் அதில் தனக்கு போதுமான வருவாய் கிடைப்பதாகவும் தெரிவிக்கிறார்.
ஆனால், அந்த தொழில் குறித்து விசாரிக்கச் சென்றவர்கள் அவர் குறிப்பிட்ட FM முதலான சில அலுவலகங்கள் மூடியிருப்பதாகவும், கோழிப்பண்ணை இன்னமும் கட்டப்படவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, அவர் மனைவிக்கு பங்களா வாங்க கொடுத்த பணம் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பப்பட, நான் யாருக்கும் பதில் சொல்லவேண்டியதில்லை என செலஸ்டின் கூற, பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.