அச்சுறுத்தும் டெல்டா மாறுபாடு... முக்கிய முடிவெடுத்த அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்றின் டெல்டா மாறுபாடு அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது சர்வதேச பயணிகளின் வருகையில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் தற்போது ஊரடங்கில் கொண்டு வரப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் டெல்டா மாறுபாடு அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியர்களுக்கும் விதிவிலக்குகள் உள்ளவர்களுக்கும் மட்டுமே நாட்டில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, ஜூலை 14ம் திகதி முதல் வாரத்திற்கு 3,000 பயணிகளை மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டும் எனவும், இந்த கட்டுப்பாடானது அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தனிமைப்படுத்துதல் தொடர்பில் அதிக அழுத்தம் இருக்காது என நம்புவதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறினார். ஹொட்டல் தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களிடம் இருந்தே தொற்று பரவுவதாக வெளியான தகவலை அடுத்தே தற்போது இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாரத்திற்கு 3,000 பேர்கள் மட்டுமே என்ற எண்ணிக்கையை தளர்த்த வாய்ப்பில்லை எனவும், பெரும்பாலான அவுஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் ஆலோசனைக்கு உட்படுத்தப்படும் என ஸ்காட் மோரிசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே அவுஸ்திரேலியாவின் இந்த கட்டுப்பாடுகள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பலரையும் தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் செய்துவிடும் என அச்சம் எழுந்துள்ளது.