ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் திடீர் குழப்பம்: விமானங்கள் ரத்து
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் திடீரென எச்சரிக்கை அலாரம் அடித்ததைத் தொடர்ந்து அங்கு பெரும் குழப்பம் உருவானது.
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் உருவான குழப்பம்
ஜேர்மனியில் ஹாம்பர்க் விமான நிலையத்தில், இன்று காலை உள்ளூர் நேரப்படி 9.45 மணியளவில், திடீரென எச்சரிக்கை அலாரம் அடிக்க, உடனடியாக பயணிகளை விமான நிலையத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன், புறப்படத் தயாராக இருந்த விமானங்களில் அமர்ந்திருந்த பயணிகளும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட, அங்கு பெரும் குழப்பம் உருவானது.
உடனடியாக பொலிசார் நடந்தது என்ன என ஆய்வு மேற்கொள்ள, தீவிபத்து போன்ற அவசர காலங்களில் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கென அமைக்கப்பட்டுள்ள அவசர வழியின் பொத்தானை ஒருவர் அழுத்தியதுடன், அந்த வழியாக அவர் வெளியேறியதும் தெரியவந்தது.
அவரை பிடித்து பொலிசார் விசாரணை மேற்கொள்ள, அவர் அது அவசர வழி என்பது தெரியாமலே அவ்வழியாக வெளியேறியது தெரியவந்துள்ளது.
இந்த குழப்பத்தைத் தொடர்ந்து மெல்ல விமான நிலையம் சகஜ நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக விமான நிலைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், இன்று முழுவதும் சில விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகள் தாமதங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |