மகள் காணாமல் போனதால் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை: மௌனம் கலைத்துள்ள மகள்
அமெரிக்காவில் தன் மகள் காணாமல் போனதால் மனமுடைந்த தந்தை ஒருவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட விடயத்தில், அந்த இளம்பெண் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.
மகள் காணாமல் போனதால் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை
அமெரிக்காவிலுள்ள Maui என்னுமிடத்தைச் சேர்ந்த ஹன்னா (Hannah Kobayashi, 30), கடந்த மாத துவக்கத்தில் ஹவாயிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு விமானத்தில் சென்றார்.
அவர் நவம்பர் மாதம் 8ஆம் திகதி நியூயார்க் விமானம் ஒன்றைப் பிடிக்கவேண்டியதாக இருந்தது.
ஆனால், அதற்குப் பிறகு அவரிடமிருந்து அவரது குடும்பத்துக்கு எந்த தகவலும் இல்லை.
மகள் காணாமல் போனதாக அவர்கள் பொலிசாருக்கு தகவலளித்தார்கள்.
ஹன்னாவின் தந்தையான ரயான் (Ryan), லாஸ் ஏஞ்சஸுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மகளைத் தேடும் முயற்சியில் இறங்கினார்.
மகள் கிடைக்காத நிலையில், மனமுடைந்து, நவம்பர் மாத இறுதியில் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார் ரயான். லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் ஒரு கார் பார்க்கிங் ஒன்றில் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மௌனம் கலைத்துள்ள மகள்
மகளைக் கண்டுபிடிக்கமுடியாததால் ரயான் உயிரை மாய்த்துக்கொள்ள, ஒரு மாதத்துக்குப் பின் ஹன்னா உயிருடன், பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருப்பது தெரியவந்தது.
திங்கட்கிழமை முதன்முறையாக மௌனம் கலைத்த ஹன்னா, தான் மெக்சிகோவுக்குச் சென்றதாகவும், டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னைக் காணாமல் தன் தந்தை தன் உயிரை மாய்த்துக்கொண்ட விடயம் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் ஹன்னா.
இந்த சவாலான நேரத்தில் தான் மற்றும் தனது குடும்பத்தினருடைய தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஹன்னா.