பிரித்தானியாவில் இதுவரை எவ்வளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன? சுகாதாரத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்கள் உருவாக்கிய கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை, இதுவரை 6,00,000-க்கும் மேற்பட்ட பிரித்தானிய குடிமக்கள் பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
"குறிப்பிடத்தக்க சவால்களை சமாளிக்க தேசிய சுகாதார சேவை (NHS) மேற்கொண்ட பெரும் முயற்சிக்கு நன்றி, பிரித்தானியா முழுவதும் 616,933 பேர் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்" என்று சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை பிற்பகுதியில் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் 521,594 பேரும், ஸ்காட்லாந்தில் 56,676 பேரும், வேல்ஸில் 22,595 பேரும் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 16,068 பேரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.
மேலும், "வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில், அதிக டோஸ்கள் கிடைப்பதால் தடுப்பூசி விகிதம் அதிகரிக்கப்பட்டு, திட்டம் தொடர்ந்து விரிவடையும், மேலும் தடுப்பூசிகள் நேரடியாக பராமரிப்பு இல்லங்களுக்கு வழங்கப்படும்" என்று சுகாதாரத்துறை கூறியது.
கடந்த வாரம், பிரித்தானியாவில் சில பகுதிகளில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை அடையாளம் கண்டுள்ளது, இது மற்ற SARS-CoV-2 வைரஸ் விகாரங்களை விட 70 சதவீதம் அதிகமாக பரவக்கூடியதாககே கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிரித்தானியா முழுவதும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல நாடுகள் பிரித்தானியாவுடனான எல்லைகளை மூடியதுடன், போக்குவரத்து தடைகளை அமுல் படுத்தியுள்ளன.
இதற்கிடையில், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளே புதிய கொரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்படும் என வெளியாகியுள்ள சில தகவல்கள் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளிடையேயே நம்பிக்கையை அளித்துள்ளது.