டோனி என்ன என் மனைவியா? சர்ச்சை பேட்டியை அடுத்து திடீர் பல்டி அடித்த இந்திய வீரர்
டோனி மீது தனக்கு எந்தவொரு கோபமும் இல்லை என ஜாம்பவான் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ள இவர் டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
தற்போது ஐபிஎல் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றுள்ள அவர் விரைவில் ஒரு ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வுக்கு பின்னர் அவர் அளித்த ஒரு பேட்டி விவாத பொருளாக மாறியது. அதன்படி, 31 வயதிலேயே 400 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த போதிலும் காரணமே இல்லாமல் கழட்டி விடப்பட்டதாக பிசிசிஐ மீது குற்றம் சாட்டி இருந்தார்.
அத்துடன் அந்த சமயத்தில் கேப்டனாக இருந்த டோனி தமக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்திருந்தார். அத்துடன் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் தன்னுடன் விளையாடிய விரேந்திர சேவாக், யுவராஜ் சிங், கௌதம் கம்பீர் போன்றவர்களுக்கு 2015 உலக கோப்பையில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் டோனி மீது குற்றம் சாட்டியிருந்தார்.
டோனி மீது உள்ள கோபத்தின் காரணமாகவே இவ்வளவு நாட்கள் கழித்து ஹர்பஜர் சிங் இப்படியெல்லாம் பேசுகிறார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஹர்பஜன் அளித்த பேட்டியில், டோனி மீது எந்தவித புகாரும் இல்லை கோபமும் இல்லை. முதலில் நான் கூறிய கருத்துக்கள் பல்வேறு வகைகளில் எடுத்து கொண்டுவிட்டார்கள்.
டோனி உடனான உறவு நல்லபடியாக உள்ளது. நான் ஒன்றும் அவருடன் திருமணம் செய்து கொள்ளவில்லை, அவர் என் மனைவியில்லை. அவருக்கு எதிராக எந்த புகாரும் இல்லை.
நான் பிசிசிஐயை சர்க்கார் என அழைப்பேன். அந்த சமயத்தில் இருந்த தேர்வு குழுவினர் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. அவர்கள் இந்திய அணியை ஒற்றுமையாக இருக்க விடவில்லை என கூறியுள்ளார்.