நியூசிலாந்தை வீழ்த்த தோனியாக வேண்டும்! கோலிக்கு ஹர்பஜன் அறிவுரை
ஆடுகளத்தில் தோனியை போல் செயல்படுமாறு கோலிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியுள்ள இந்தியா-நியூசிலாந்து இரு அணிகளும் இன்று அக்டோபர் 30 மோதவிருக்கின்றன.
இரு அணிகளுக்கும் இது மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்தை வீழ்த்த கோலி களத்தில் தோனியை போல் செயல்பட வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் கூறியதாவது, டி20 போட்டிகளில் நீங்கள் விக்கெட் எடுக்கவில்லை என்றால் தோல்வியை நோக்கி செல்கிறீர்கள் என்று அர்த்தம்.
விக்கெட்டுகளை வீழ்த்த சிஎஸ்கே கேப்டனாக இருக்கும் போது தோனி பீல்டிங் செட் செய்து அழுத்தம் கொடுப்பது போல் பேட்ஸ்மேனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பந்து எங்கு செல்லும் என்று அவர் எதிர்பார்க்கிறாரோ அங்கு பீல்டரை நிறுத்துவார். இதுபோன்ற கேப்டன்சியை நான் கோலியிடமிருந்து எதிர்பார்க்கிறேன், இந்த போட்டியில் இந்தியாவிடம் இருந்து இதுபோன்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
இந்தியாவின் வெற்றிக்கு கேன் வில்லியம்சன் விக்கெட் மிக முக்கியமானதாக இருக்கும்.
கேன் வில்லியம்சன் மீது இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தியா அவரை முன்கூட்டியே அவுட்டாக்கினால், நியூசிலாந்தை 130க்குள் சுருட்ட முடியும் என்று நான் நம்புகிறேன்.
அவ்வாறு செய்தால், இந்தியா அதை எளிதாக அடித்து வெற்றப்பெற முடியும் என ஹர்பஜன் கூறியுள்ளார்.