இனவெறி குற்றச்சாட்டு! சண்டைகளுக்கு பின் தோழமை..ஆண்ட்ரு சைமண்ட்ஸ் குறித்து இந்திய வீரர் உருக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் மறைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் ஆல்ரவுண்டர் வீரரான ஆண்ட்ரு சைமண்ட்ஸ் கார் விபத்தில் பலியானது கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சைமண்ட்ஸுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'காலை எழுந்ததும் எனது போனைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன், ஆண்ட்ரூ இப்போது இல்லை என்ற செய்தியால் நான் உடைந்து போனேன். ஆண்ட்ரூ இப்போது இல்லை என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை, ஏனென்றால் அவர் மிகவும் வலிமையானவர். என்ன நடந்தது என்பது மிகவும் வருத்தமான விடயம். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், இது நம் அனைவருக்கும் இழப்பு' என தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு, சிட்னியில் நடந்த இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது, தனக்கு எதிராக இனரீதியான அவதூறுகளை ஹர்பஜன் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இந்த விடயம் அப்போது பூதாகரமாக வெடித்தது. அதனைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்குக்கு முதலில் மூன்று போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டு, பின் அது 50 சதவீத அபராதமாக மாற்றப்பட்டது.
சைமண்ட்ஸ் உடனான நட்பு குறித்து ஹர்பஜன் சிங் கூறும்போது, 'எங்களுக்கு நிறைய கதைகள் உள்ளன. உடை மாற்றும் அறையில் எங்களுக்குள் புரிதல் ஏற்பட உதவிய ஐபிஎல் மற்றும் மும்பை இந்தியன்ஸுக்கு நன்றி. அன்பான அந்த மனிதரை பற்றி நான் தெரிந்துகொண்ட பிறகு நண்பர்களாகிவிட்டோம். ஒன்றாக உட்கார்ந்து குடிப்போம், சிரிப்போம். நிறைய கதைகளை அவர் பரிந்துள்ளார். அவர் எப்படிப்பட்டவர் என்றால், இரவு 2.30 மணிக்கு போன் செய்து நண்பா என்ன செய்கிறாய்?, வா சிந்திப்போம் என்று கூறுவதுடன் அதற்கு தயாராகவும் இருப்பார்' என தெரிவித்துள்ளார்.