டி20 உலகக்கோப்பை! நாளைய போட்டியில் விளையாட இந்திய நட்சத்திர வீரர் உடற்தகுதியுடன் உள்ளாரா? உறுதிப்படுத்திய கோலி
உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருப்பதாக விராட் கோலி உறுதி செய்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தற்போது கடும் நெருக்கடியான சூழல் நிலவுகிறது. பாகிஸ்தானுடன் தோல்வியடைந்ததால் அடுத்ததாக நியூசிலாந்தை வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.
இந்த போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. ஏனெனில் தொடர்ந்து பல போட்டிகளில் அவர் பந்துவீசாமல் இருந்து வருகிறார்.
2018 ஆசிய தொடரில் முதுகுப்பகுதியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஆடவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வரவே அதிக காலம் எடுத்துக்கொண்ட பாண்டியா, அதன்பின்னரும் அடுத்தடுத்து சில காயங்களால் முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் போனார்.
முழு ஃபிட்னெஸுடன் இல்லாததாலேயே அவரால் பவுலிங்கும் வீசமுடியாமல் போயிற்று. கடைசியாக இலங்கை சுற்றுப்பயணத்தில் பந்துவீசினார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவர் கூட வீசவில்லை.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் பாண்டியா பந்துவீசவில்லை. இதனால் அவர் உடற்தகுதியில் பிரச்சினை உள்ளதா என கேள்வி எழுந்தது.
இதற்கான பதிலை இந்திய கேப்டன் விராட் கோலி அளித்துள்ளார். அவர் கூறுகையில், நியூசிலாந்து அணியுடனான நாளைய போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியா உடற்தகுதியுடன் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இதனால் நாளைய போட்டியில் ஹர்திக் விளையாடுவது உறுதியாகியுள்ளதோடு, அவர் பந்துவீசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.