தோற்றால் ஒரு வீரரை மட்டும் குறை சொல்ல மாட்டோம்: வெற்றிக்கு பின் கெத்தாக பேசிய குஜராத் கேப்டன்
வெற்றி பெற்றால் ஒரு அணியாக வெற்றி பெறுவோம், தோற்றால் ஒரு அணியாக தான் தோற்போம் என குஜராத் அணித்தலைவர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் முதல் அணியாக நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்குள் குஜராத் அணி நுழைந்துள்ளது.
குஜராத் அணி பெரிய ஸ்கோரை அடிக்காவிடிலும் பந்துவீச்சில் மிரட்டியது. குறிப்பாக ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். போட்டி முடிந்ததும் வெற்றி குறித்து பேசிய குஜராத் அணித்தலைவர் ஹர்திக் பாண்ட்யா, தங்கள் அணி வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் ஒட்டுமொத்த அணிக்கு தான் சேரும் என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசும்போது, 'எங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். 14 போட்டிகள் முடிவதற்குள் பிளே ஆப் சென்றுவிட்டோம். சில போட்டிகளில் நெருக்கடிகளை சமாளித்தோம். நாங்கள் எப்போதும் ஒரு அணியாக செயல்படுகிறோம். எப்போதும், வென்றால் ஒரு அணியாக வெல்கிறோம். தோற்றாலும் கூட ஒரு அணியாக தோற்கிறோம்.
ஒரு வீரரால் தான் தோற்றோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எப்போதும் அணியில் ஒருவருடன் இணைந்து மற்றொருவரும் நிற்கிறோம். இந்த உத்வேகத்தை தொடர்ந்து எடுத்து செல்வோம்' என தெரிவித்தார்.