இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறேன்: ஹர்திக் பாண்ட்யா
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வந்த குஜராத் அணிக்கு நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி முட்டுக்கட்டை போட்டது.
பந்துவீச்சில் மிரட்டிய பஞ்சாப் அணி, பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின் பேசிய குஜராத் அணித்தலைவர் ஹர்திக் பாண்ட்யா, தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், 'நாங்கள் 170 ஓட்டங்கள் எடுத்திருந்தால் சிறந்த ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் நன்றாக சேசிங் செய்து வருகிறோம். ஆனால் எங்களது துடுப்பாட்ட வீரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை உறுதி செய்ய விரும்பினோம். முதலில் பேட்டிங் செய்யும்போது நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
தோல்வியை நான் ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறேன். எந்த இடத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்பது பற்றி ஆலோசித்து அதில் கவனம் செலுத்துவோம்.
தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். பெரும்பாலும் நாங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் இருந்திருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.