ராஜஸ்தானை அடித்து நொறுக்கிய வீரர்! மகிழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யா
குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டேவிட் மில்லரை நினைத்து பெருமைப்படுவதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த குவாலிபையர்-1 போட்டியில், குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 189 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் கேப்டன் ஹர்திக் 40 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 68 ஓட்டங்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
குறிப்பாக அதிரடியில் மிரட்டிய மில்லர் 38 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார். போட்டி முடிந்ததும் பேசிய குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் வெவ்வேறு மாதிரியானவர்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.
Photo Credit: BCCI-IPL
ரஷித்கான் பந்து வீச்சு நன்றாக இருந்தது. மீண்டும் அவருக்கு பந்து வீச்சில் நல்ல நாளாக அமைந்தது. இந்த போட்டித் தொடரில் டேவிட் மில்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை.
Photo Credit: BCCI-IPL
அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன். நான் எனது வாழ்க்கையில் பல்வேறு விடயங்களை சமநிலைப்படுத்த தொடங்கி விட்டேன். என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்ற எனது குடும்பம் உதவியது' என தெரிவித்துள்ளார்.
டேவிட் மில்லர் நடப்பு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 449 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும்.
Photo Credit: Twitter