ஹரி குழந்தையின் நிறம் குறித்து பேசிய பிரித்தானிய ராஜ குடும்பத்திலுள்ள இன வெறுப்பாளர் யார்? தவறுதலாக பெயர் வெளியானதால் பரபரப்பு
இளவரசர் ஹரியின் குழந்தையின் நிறம் குறித்து ராஜ குடும்பத்திலுள்ள ஒருவர் பேசியதாக கூறப்படும் விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வேற்று மொழி ஒன்றில் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் தவறுதலாக அவரது பெயர் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இளவரசர் ஹரியின் குழந்தையின் நிறம் குறித்து எழுந்த சர்ச்சை
பிரித்தானியர்களாகிய ராஜ குடும்பத்துக்குள் அமெரிக்கப் பெண்ணான மேகன் அடியெடுத்துவைத்த நாள் முதல், ராஜ குடும்பம் பல்வேறு அவமானங்களை சந்தித்துவருகிறது.
மேகன் ஒரு கலப்பினப் பெண். அதாவது அவரது தாய் கருப்பினத்தவர், தந்தை வெள்ளையினத்தனர். இந்நிலையில், இளவரசர் ஹரியும் மேகனும் காதலிக்க, இருவரும் எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்துகொண்டார்கள்.
மேகன் கருவுற்றார். அப்போது, மேகன் கலப்பினப்பெண் என்பதால், அவருக்குப் பிறக்கும் குழந்தையின் நிறம் என்னவாக இருக்கும் என பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் என்ன நோக்கத்தில் கேட்டாரோ தெரியாது, ஆனால், அவர் இனவெறுப்பில் பேசியதாக தகவல் பரவியது. அத்துடன், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றதும், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்கள்.
அப்போது, தன் மகனுடையை நிறம் குறித்து ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக வெளிப்படையாக கூறினார் மேகன்.
ஆனாலும், அவரது பெயரை வெளியே சொன்னால், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால், தான் அவர் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும் மேகன் கூறியிருந்தார்.
சுயசரிதை எழுதிய நபர் உருவாக்கிய பிரச்சினை
பின்னர், ஹரி தனது சுயசரிதையாக 'Spare' என்னும் புத்தகத்தை எழுதினார். மேலும் ராஜ குடும்பத்தில் சர்ச்சைகள் உருவாகின.
அந்த புத்தகத்தை எழுத, ஹரி மேகன் தம்பதியருக்கு உதவிய எழுத்தாளர், ஓமிட் ஸ்கோபி (Omid Scobie) என்பவர். அவர் தங்கள் நண்பர் என மேகன் முதலில் கூறியிருந்த நிலையில், பின்னர் அவரிடமிருந்து விலகினார்கள் ஹரியும் மேகனும்.
தற்போது ஓமிட் ராஜ குடும்பம் தொடர்பில் மற்றொரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் பெயர்,ENDGAME: Inside the Royal Family and the Monarchy’s Fight for Survival.
பிரச்சினை என்னவென்றால், ஓமிட் எழுதிய இரண்டாவது புத்தகத்தின் டச்சு மொழிப்பெயர்ப்பில், தவறுதலாக, ஹரி மேகன் தம்பதியரின் மகனுடைய நிறத்தைக் குறித்து பேசிய இனவெறுப்பாளரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
அதாவது, அந்த காலகட்டத்தில், தனது மகனுடைய நிறம் குறித்து இப்படி ராஜ குடும்பத்தில் ஒருவர் பேசியுள்ளதாக, மேகன் மன்னர் சார்லசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.
அதைக் குறித்து எழுதும்போது, தவறுதலாக அவரது பெயரை ஓமிட் குறிப்பிட்டுவிட்டாராம். ஆங்கில மொழிப் புத்தகத்தில் அவர் அதை எடிட் செய்து அகற்றிவிட்டாலும், டச்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த புத்தகத்தில், ஹரி மேகன் தம்பதியரின் மகனுடைய நிறத்தைக் குறித்து பேசிய இனவெறுப்பாளரின் பெயர் நீக்கப்படவில்லையாம்.
அமெரிக்கா உத்தரவு
டச்சு மொழிப்புத்தகத்தில் ஹரி மேகன் தம்பதியரின் மகனுடைய நிறத்தைக் குறித்து பேசிய இனவெறுப்பாளரின் பெயர் தவறுதலாக இடம்பெற்றுவிட்டதால், உடனடியாக நெதர்லாந்தில் அந்த புத்தக விற்பனையை நிறுத்துமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டதன் பேரில், புத்தக விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஆயிரக்கணக்கான புத்தங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |