பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா? முதன் முறையாக ரகசியத்தை உடைத்த ஹரி -மேகன் தம்பதி
பிரித்தானிய அரச குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள ஓப்ரா வின்ஃப்ரே உடனான இளவரசர் ஹரி- மேகன் தம்பதியின் பேட்டியில் பிறக்கவிருக்கும் குழந்தை தொடர்பில் ரகசியம் உடைக்கப்பட்டுள்ளது.
பிரபல தொலைக்காட்சி ஆளுமையான ஓப்ரா வின்ஃப்ரே, பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது காதல் மனைவியான மேகன் மெர்க்கலுடன் மனம் திறந்து பேசும் நிகழ்ச்சி ஒன்றை மேற்கொண்டார்.
குறித்த நிகழ்ச்சி பிரித்தானிய அரச குடும்பத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி வருவதுடன், ஹரி- மேகன் தம்பதிகளுக்கு ஆதரவாகவும், பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஆதரவாகவும் மக்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, தற்போது இரண்டாவதாக கர்ப்பமடைந்துள்ள மேகன் மெர்க்கல் தமக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினம், எதிர்காலத் திட்டம் தொடர்பில் பல முக்கிய ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக அரச குடும்பத்து ரகசியங்கள் எதுவும் உரிய காலத்தில், உரிய முறைப்படியே பொதுமக்களுக்கு அறிவிப்பார்கள்.
ஆனால், இளவரசர் ஹரி மற்றும் மேகன் அரச குடும்பத்தைவிட்டு வெளியேறியுள்ளதால், தற்போது தமக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினம் தொடர்பில் மேகன் மெர்க்கல் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆண் குழந்தைக்கு தாயான மேகன் மெர்க்கலுக்கு அடுத்து பிறக்கவிருப்பது பெண் குழந்தை என தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, தங்களுக்கு இரு குழந்தைகள் போதும் எனவும், ஹரி- மேகன் தம்பதி தெரிவித்துள்ளனர்.
எந்த பாலினமானாலும் இரண்டு குழந்தைகளுடன் கூடிய குடும்பம் அருமை என சிலாகித்துப் பேசிய ஹரி- மேகன் தம்பதி,
ஒரு ஆண் குழந்தைக்கு பின்னர் பெண் குழந்தை ஒன்று கிடைத்துவிட்டால் வேறு என்ன பெரிதாக கேட்டுவிட முடியும் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.
மே மாதத்திற்கு பிறகு குழந்தை பிறப்பு இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. காதலர் தினத்தன்று, புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தாங்கள் இரண்டாவது பிள்ளைக்கு பெற்றோராகப் போவதை ஹரி- மேகன் தம்பதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


