பாகிஸ்தான் தோற்கும்வரை விமர்சிக்க காத்திருக்கிறார்கள்: ஆனால் நாங்கள்.,ஹாரிஸ் ராஃப்பின் பதிலடி
பாகிஸ்தான் அணியில் புதிய வீரர்கள் மீதான நம்பிக்கை எதிர்காலத்தில் பலனளிக்கும் என்று வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் கூறியுள்ளார்.
கடுமையான விமர்சனங்கள்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
சாம்பியன்ஸ் ட்ராபியில் வெளியேறியபோது எதிர்கொண்ட விமர்சனங்களுடன், இந்த தோல்விகளின் மூலம் மேலும் கடுமையான விமர்சனங்களை அந்த அணி சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு ஆதரவாக வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் குரல் கொடுத்துள்ளார்.
ஹாரிஸ் ராஃப்
குறிப்பாக இந்தத் தொடரில் அறிமுகமாகியுள்ள ஹசன் நவாஸ், அப்துல் சமாத், முகமது அலி ஆகியோர் குறித்தும் பேசிய அவர், "நீங்கள் விமர்சனங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள், அது பாகிஸ்தானில் வழக்கமாகிவிட்டது என்று நினைக்கிறேன்.
இவர்கள் இளம் வீரர்கள். நீங்கள் உலகின் எந்த இடத்திற்கும், எந்த அணிக்கும் சென்றாலும் அவர்கள் இளைஞர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்கள்.
இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால், அவர்களுக்கு 10 முதல் 15 போட்டிகள் வரை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அப்படித்தான் அவர்கள் வீரர்களாக மாறுக்கிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் நுழையும் அனைவரும் ஆரம்பத்தில் போராடுகிறார்கள். நீங்கள் விமர்சனங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள், அது ஒரு வழக்கமாகிவிட்டது. பாகிஸ்தான் அணி தோற்கும் வரை அனைவரும் உட்கார்ந்து காத்திருக்கிறார்கள்.
அதனால் அவர்கள் அதைப்பற்றிப் பேச முடியும். அவர்களுக்கு அவர்களின் கருத்துக்கள் உள்ளன. ஆனால், நாங்கள் எங்கள் அணியை உருவாக்க முயற்சிக்கிறோம்.
சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிபெற என்ன தேவை என்பது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம். அவர்கள் எவ்வளவு விரைவாகக் கற்றுக்கொள்கிறார்களோ அவ்வளவு சிறப்பாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |