ஒரே வாரத்தில் ரூ 1,674 கோடி தேர்தல் நிதியாக திரட்டிய கமலா ஹாரிஸ்
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தமது பரப்புரையை தொடங்கிய ஒரு வாரத்தில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தேர்தல் நிதியாக 200 மில்லியன் டொலர் தொகையை திரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்புக்கு எதிரான மன நிலை
முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு எதிரான தேர்தல் களத்தில் திரட்டப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவென்றே கூறப்படுகிறது.
கமலா ஹாரிஸின் பரப்புரை நிர்வாகக் குழுவினர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள தகவலில், கடந்த ஒரு வாரத்தில் திரட்டப்பட்ட தொகை தொடர்பில் தரவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதில் 66 சதவிகிதத்தினர், 2024 ஜனாதிபதி தேர்தலுக்காக முதல் முறையாக நன்கொடை அளிப்பவர்கள் என்றே கண்டறியப்பட்டுள்ளது. அதாவது டொனால்டு ட்ரம்புக்கு எதிரான மன நிலையை இது வெளிப்படுத்துவதாகவே கூறுகின்றனர்.
மட்டுமின்றி, ஜோ பைடன் தேர்தல் களத்தில் இருந்து விலகியதன் பின்னர் கமலா ஹாரிஸை அவர் ஆதரிப்பதாக கூறிய பின்னர் தேர்தல் நிதி குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே வாரத்தில் 200 மில்லியன் டொலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ 1,674 கோடி தொகையை தேர்தல் நிதியாக கமலா ஹாரிஸ் திரட்டியுள்ளார்.
மட்டுமின்றி, 170,000 தன்னார்வலர்கள் கமலா ஹாரிஸ் தேர்தல் பரப்புரைக்கு உதவ முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக பலர் ஆதரிக்கத் தொடங்கியதும், தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது என்றும்,
போட்டி மிகுந்த சில மாகாணங்களில் மிக குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி உறுதி செய்யப்படலாம் என்றே நிபுணர்கள் தரப்பு குறிப்பிடுகின்றனர்.
செல்வாக்கு மிகுந்த தலைவர்கள்
சனிக்கிழமை Pittsfield பகுதியில் கமலா ஹாரிஸ் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்பகுதியில் 400,000 டொலர் வரையில் தேர்தல் நிதியாக திரட்ட முடியும் என நம்பியிருந்த நிலையில், 1.4 மில்லியன் டொலர் தொகை நன்கொடையாக திரட்டப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடனின் ஆதரவு கிடைத்த பின்னர், கட்சியின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பலரின் ஆதரவைப் பெற கமலா ஹாரிஸ் போராடும் நிலை ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.
ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மிகுந்த தம்பதியாக அறியப்படும் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஆகியோர் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை தங்கள் ஆதரவை ஹாரிஸுக்கு அறிவித்துள்ளனர்.
முன்னதாக ஜோ பைடன் தேர்தல் களத்தில் இருந்து விலகி, கமலா ஹாரிஸ் வெளிப்படையாக தேர்தல் களத்திற்கு வந்ததும், முதல் 24 மணி நேரத்தில் பலர் நன்கொடை அளிக்க உறுதி செய்ததுடன், அந்த தொகை மட்டும் 150 மில்லியன் டொலர் என கடந்த வாரம் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |