தாத்தாவின் இறுதிச்சடங்குக்காக பிரித்தானியா வருவதற்கே பயந்தேன்... மவுனம் கலைக்கும் இளவரசர் ஹரி
தனது தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குக்காக பிரித்தானியா வருவதற்கு தான் பயந்ததாக தெரிவித்துள்ளார் இளவரசர் ஹரி. இளவரசர் ஹரியும் மேகனும் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறி, பிரித்தானியாவை விட்டே வெளியேறி அமெரிக்காவில் வாழத் தொடங்கிய நிலையில், ஹரியின் தாத்தாவும், பிரித்தானிய மகாராணியாரின் கணவருமான இளவரசர் பிலிப் உடல் நலம் குன்றி உயிரிழந்தார்.
ஏற்கனவே ராஜ குடும்பத்துக்கும், ஹரி மேகன் தம்பதிக்குமான உறவில் விரிசல் விட்டிருந்த நிலையில், ஓபராவுடனான ஹரி மேகனின் தொலைக்காட்சிப் பேட்டி நிலைமையை மோசமாக்கிவிட்டிருந்தது.
அப்படி ஒரு சூழல் நிலவிய நிலையில் இளவரசர் பிலிப் இறந்துபோக, தாத்தாவின் இறுதிச்சடங்குக்கு ஹரியும் மேகனும் வருவார்களா மாட்டார்களா என ஊடகங்களுடன் மக்களும் காத்திருந்தனர்.
ஆனால், ஹரி வந்தார், மேகன் வரவில்லை. மேகன் வராததற்கு அவர் கர்ப்பமாக இருந்தது காரணமாக கூறப்பட்டது. இறுதிச்சடங்கு முடிந்ததும், பாட்டியின் பிறந்தநாளுக்குக் கூட பிரித்தானியாவில் தங்காத ஹரி அமெரிக்கா திரும்பிவிட்டார்.
இப்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக தொடர்ச்சியாக பேட்டிகள் அளித்து வருகிறார் ஹரி. அந்த பேட்டியின்போது பல விடயங்களை மனம் திறந்து பேசியுள்ளார் அவர்.
அவற்றில் ஒன்று, தான் தனது தாத்தாவின் இறுதிச்சடங்குக்காக பிரித்தானியாவுக்கு திரும்ப, தான் பயந்ததாக அவர் கூறியுள்ளது. நான் இறுதிச்சடங்குக்காக பிரித்தானியாவுக்கு வருவது குறித்து கவலையடைந்தேன், பயந்தேன் என்று கூறியுள்ளார் அவர்.
ஆனால், தான் மன நல சிகிச்சை எடுத்துக்கொண்டதால், ஒருவாறாக தன்னால் சமாளிக்க முடிந்ததாக தெரிவித்துள்ள ஹரி, ஆனாலும், தன் இதயம் பயத்தால் துடிப்பதை தன்னால் கேட்க முடிந்ததாக தெரிவித்துள்ளார்.