டயானாவின் சிலையை வடிவமைத்தது யார் தெரியுமா? ஹரி-வில்லியம் உருக்கமுடன் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கை
மறைந்த இளவரசி டயானாவின் சிலையை ஹரி மற்றும் வில்லியம் இருவரும் சேர்ந்து திறந்து வைத்த நிலையில், இருவரும் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இன்று பிரித்தானிய இளவரசி டயானாவின் 60-ஆவது பிறந்தநாள் என்பதால், தங்கள் தாயின் நினைவாக, இளவரசர்கள் வில்லியமும் அவரது தம்பியான ஹரியும், டயானாவின் உருவச் சிலை ஒன்றை கென்சிங்டன் மாளிகையில் உள்ள தோட்டத்தில் திறந்து வைக்க முடிவு செய்தனர்.
அதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்தது. இதையடுத்து இன்று மதியம் உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன் படி இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் இருவரும் சிலை திறக்கப்படும் இடத்திற்கு வந்தனர். ஹரி திருமணத்திற்கு பிறகு வில்லியம் மற்றும் ஹரிக்கு இடையே பிரச்சனை இருப்பதாகவும், இருவருமே பேசிக் கொள்ளமாட்டார்கள் என்றும் செய்தி வெளியானது.
ஆனால், அதற்கு எல்லாம் இன்று முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இருவரும் சிரித்துக் கொண்டு பேசிய படி வந்து தங்கள் தாயின் சிலையை திறந்து வைத்தனர். அதன் பின் இந்த சிலை திறப்பு குறித்து ஹரி மற்றும் வில்லியம் இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், இன்று எங்கள் தாயின் 60-வது பிறந்த நாள். அவருடைய அன்பு, வலிமை மற்றும் குணங்களை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும், நாங்கள் எப்போதும் அவர் எங்களுடன் இருந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், இப்போதும் விரும்புகிறோம்.
இந்த சிலை அவரது வாழ்க்கை மற்றும் அவரது மரபின் அடையாளமாக என்றென்றும் காணப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த சிலை உருவாவதற்கான திட்டத்தில் ஈடுபட்டவர்களான சிற்பி Ian Rank-Broadley முதல் தோட்ட வடிவமைப்பாளரான Pip Morrison வரை பாராட்டுவதாக குறிப்பிட்ட வில்லியம்சன்-ஹரி, இதைச் செய்ய உதவிய நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கும், எங்கள் தாயின் நினைவகத்தை உயிரோடு வைத்திருக்கும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தனர்.
டயானாவின் சிலையை உருவாக்கிய சிறந்த சிற்பி Ian Rank-Broadley. கடந்த 2017 ஆம் ஆண்டில் சிலையை உருவாக்குவதற்கான ஆணையத்தை ஏற்றுக்கொண்டனர்.1998 முதல் அனைத்து நாணயங்களிலும் பயன்படுத்தப்பட்ட ராணியின் உருவத்தையும் Ian Rank-Broadley உருவாக்கினார்.
கடந்த ஏப்ரல் மாதம் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்கு ஹரி மற்றும் வில்லியம் இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்தித்துக் கொண்டனர்.
சிலை திறப்பதற்கு சில நிமிடங்கள் முன்னரே வந்த இவர்கள், மகிழ்ச்சியாக உரையாடி பேசிக் கொண்டிருந்தனர். இதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக பிரித்தானியர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஏனெனில், கடந்த 18 மாதங்களுக்கு முன்பு ஹரி தன்னுடைய மனைவி மேகனுடன் சேர்ந்து அரச குடும்பத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதன் பின், அவர் தன் குடும்பத்தைப் பற்றி பல கருத்துக்களை தெரிவித்தார். இது பூதாகரமான பிரச்சனையாக வெடித்தது. ஆனால், தற்போது அதை எல்லாம் மறந்து, ஒதுக்கி வைத்துவிட்டு, தங்களுடைய தாய்க்காக ஒன்று சேர்ந்துள்ளனர். ஆரம்பத்தில்
இந்த சிலை திறப்பு என்பது பிரம்மாண்டமாகவே நடத்த முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் கொரோனா பரவல் காரணமாக, இது ஒரு சிறிய நிகழ்வாக மாறிவிட்டதாக அரச வட்டாரத்தில் கூறப்படுகிறது.