சமூக ஊடக செயலிகளை நீக்கிய ஹரி பூறூக் : காரணம் என்ன தெரியுமா?
இங்கிலாந்து அணியின் வீரர் ஹரி பூறூக், எதிர்மறை மனோ நிலைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து சமூக ஊடக செயலிகளை நீக்கியுள்ளார்.
தொலைபேசிகளில் இருந்து சமூக ஊடக செயலிகளை நீக்கிய ஹரி பூறூக்
சமூக ஊடக செயலிகளை அகற்றியதன் மூலம், சிறந்த உள ஆரோக்கியத்தை பேண முடிந்ததாகவும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடிந்ததாகவும் ஹரி பூறூக் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் 24 வயதான இளம் வீரரான ஹரி பூறூக், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், கடந்த ஆண்டு சர்வதேச 20 க்கு 20 வெற்றிக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
எனினும் கடந்த ஒக்ரோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பிரகாசிக்க தவறிய ஹரி பூறூக், 28.16 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
தற்போது தாம் சமூக ஊடகங்கள் அனைத்தில் இருந்தும் வெளியேறியுள்ளதாகவும் சமூக ஊடக செயலிகளை தமது கையடக்க தொலைபேசிகளில் இருந்து அழித்துள்ளதாகவும் ஹரி பூறூக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்மறையான விடயங்களை தாம் பார்க்கவில்லை எனவும் அது தனது விளையாட்டிற்கு உதவியது எனவும் அவர் கூறியுள்ளார்.
உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடிப்பதற்கு முன்னர் மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே ஹரி பூறூக் விளையாடியிருந்தார்.
ஜோசன் ரோய்க்கு பதிலாக அவர் இங்கிலாந்து அணியில் இணைக்கப்பட்டிருந்த போதிலும் அந்த தொடரில் 66 ஓட்டங்களை மாத்திரமே அவர் பெற்றிருந்தார்.
எனினும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதலாவது சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் மத்திய வரிசையில் களமிறங்கிய ஹரி பூறூக் 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் போது மூன்று வருட மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹரி பூறூக், தனது சமூக ஊடக செயற்பாடுகளை நிர்வாக குழுவிடம் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
இதன்மூலம் ஆடுகளத்தில் சிறப்பாக செயற்படுவது குறித்து கவனம் செலுத்த முடியும் எனவும் ஹரி பூறூக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |