அமெரிக்காவில் அரச பட்டத்தை பயன்படுத்திய இளவரசர் ஹரி! கிளம்பிய புதிய சர்ச்சை!
இளவரசர் ஹரி தனது மகள் லிலிபெட்டின் பிறப்புச் சான்றிதழில் HRH எனும் அரச பட்டம் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ள நிலையில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்தில் கடமைகளை செய்யும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே அரச பட்டங்கள் கொடுக்கப்படும்.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் 'இனி வேலை செய்யாத ராயல்கள்' என்பதால், கடந்த ஆண்டு ஜனவரியில் HRH (Her/His Royal Highness) பட்டங்களை பயன்படுத்த வேண்டாம் என்று இருவருக்கும் கூறப்பட்டது.
'மெக்சிட்' ()Meghan Exit) என்று அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், அவர்கள் தொடர்ந்து சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் என்று அறிய அனுமதிக்கப்பட்டனர், ஆனால் அவர்களிடமிருந்து பல ஆதரவு மற்றும் கவுரவ இராணுவ பட்டங்கள் பறிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு, ஹரி தனது HRH பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்க அரச வாழ்க்கையிலிருந்து விலகியபோது அதை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இளவரசர் ஹரி தனது மகள் லிலிபெட்டின் பிறப்புச் சான்றிதழில் HRH பட்டத்தை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
ஹரி-மேகன் தம்பதி இப்போது வசிக்கும் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பகிரங்கமாக வெளியிடப்பட்ட பிறப்புச் சான்றிதழின் நகலை TMZ ஊடகம் வெளியிட்டது.
அதில், லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் ஜூன் 6-ஆம் திகதி காலை 11.40 மணிக்கு சாண்டா பார்பரா காட்டேஜ் மருத்துவமனையில், தம்பதியரின் மாளிகைக்கு அருகில் பிறந்தார் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
இந்த ஆவணத்தில் ஹரியின் முதல் பெயர் The Duke of Sussex என்றும் கடைசி பெயராக His Royal Highness என்றும் பதியப்பட்டுள்ளது.
மறுபுறம் மேகன் தனது அரச பட்டங்களை முழுவதுமாக கைவிட்டுவிட்டார், அவரது பெயர் ரேச்சல் மேகன் மார்க்கல் (Rachel Meghan Markle) என்று கொடுக்கப்பட்டுள்ளது .