பிரித்தானிய மகாராணியாரை இரகசியமாக சந்தித்த ஹரி: அவர் என்ன சொன்னாராம் தெரியுமா?
ராஜ குடும்பத்தை விட்டுப் பிரிந்து, தன் மனைவி பிள்ளைகளுடன் அமெரிக்கா சென்று குடியேறிய பிரித்தானிய இளவரசர் ஹரி, சென்ற வாரம் பிரித்தானிய மகாராணியாரை இரகசியமாக சந்தித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு, இளவரசர் ஹரி, போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்காக Invictus Games என்னும் விளையாட்டுப் போட்டிகளை உருவாக்கினார். இந்த ஆண்டு அந்த விளையாட்டுப் போட்டிகள் நெதர்லாந்தில் நடைபெறுகின்றன.
அந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து செல்லும் வழியில், தனது பாட்டியாரான பிரித்தானிய மகாராணியாரை சென்று சந்தித்துள்ளார் ஹரி.
மகாராணியாரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ள ஹரி, மகாராணியார் விளையாட்டு வீரர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஹரி மேகன் தம்பதியருக்கு பிறந்த இரண்டாவது குழந்தையாகிய குட்டி இளவரசி லிலிபெட்டை மகாராணியார் இன்னமும் சந்திக்காத நிலையில், தான் மகாராணியாரை சந்தித்தபோது, அவர் தன் பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவிடும் வகையில் மீண்டும் தான் தன் குடும்பத்துடன் மகாராணியாரை சந்திக்க இருப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார் ஹரி.
இதற்கிடையில், மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களின்போது, பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் ராஜ குடும்பத்தினர் காட்சி தரும்போது, அவர்களுடன் இணைந்து கொள்ள, ஹரி மற்றும் அவரது மனைவி மேகனுக்கு மகாராணியார் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.