இளவரசர் ஹரி மேகன் குறித்த அச்சத்தால் மன்னர் எடுக்கவிருக்கும் முடிவு: ராஜ குடும்ப நிபுணர் கருத்து
இளவரசர் ஹரியும் மேகனும் மேலும் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என ராஜ குடும்பத்தினர் கருதுவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரி மேகனால் உருவான பிரச்சினைகள்
இளவரசர் ஹரி விவாகரத்தான ஒரு அமெரிக்க நடிகையை ராஜ குடும்பத்துக்குள் கொண்டுவந்த நாள் முதலே, ராஜ குடும்பத்துக்குள் பிரச்சினைகள் வெடிக்கத் துவங்கின. சொல்லப்போனால், திருமணத்துக்கு முன்பே இளவரசி கேட் கண்ணீர் விட்டுக் கதறியதாக ஒரு தகவல் வெளியானது.
பிறகு மேகனுக்கு உதவியாளர்களாகக் கொடுக்கப்பட்ட அரண்மனை ஊழியர்கள் மோசமாக நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து வரிசையாக பலர் தங்கள் வேலையை ராஜினாமா செய்தார்கள்.
Image: Patrick van Katwijk
ஹரி மேகனுடைய பேட்டி ஏற்படுத்திய பிரச்சினை
ஒரு கட்டத்தில் ராஜ அரண்மனையைவிட்டும், பிறகு பிரித்தானியாவைவிட்டும் வெளியேறியது ஹரி மேகன் குடும்பம்.
ஆனாலும் தொல்லை ஒழிந்தபாடில்லை. அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர்கள் அளித்த பேட்டியால் தலைகுனிவை சந்தித்தது ராஜ குடும்பம். கவலையுடனேயே மரணமடைந்தார் மகாராணி இரண்டாம் எலிசபெத்.
ஹரியின் புத்தகமும், நெட்ப்ளிக்ஸ் தொடரும் உருவாக்கிய பிரச்சினைகள்
பின்னர் ஹரி மேகனுடைய நெட்ப்ளிக்ஸ் தொடர் ஒன்றும், ஹரியின் புத்தகமான ஸ்பேர் என்னும் புத்தகமும் வெளியாகின.
அவற்றில், மகாராணியாரைக் கூட விடாமல், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சகட்டுமேனிக்கு அவமானப்படுத்தியிருந்தார்கள் தம்பதியர். இந்த இலட்சணத்தில் ஹரியின் அடுத்த புத்தகம் வெளியாகலாம் என்ற ஒரு தகவலும் உள்ளது.
Image: Getty Images
மன்னர் எடுக்கவிருக்கும் முடிவு
இப்படி ராஜ குடும்பத்துக்கு தொடர்ந்து அவமானத்தைக் கொண்டு வரும் ஹரி மேகனுடைய பட்டங்களைப் பறிக்கவேண்டும் என்ற குரல்கள் பல தரப்பிலுமிருந்து எழத்துவங்கின.
ஆனால், மன்னர் சார்லஸ் அப்படி ஹரி மேகனுடைய பட்டங்களைப் பறிக்கமாட்டார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Jonathan Sacerdoti.
அதற்குக் காரணம், அப்படி ஏதாவது செய்தால், அது ஹரியை இன்னும் உசுப்பேற்றி விட்டதுபோலாகிவிடும். அத்துடன், அதையும் பயன்படுத்தி ஹரியும் மேகனும் இலாபம் பார்க்கத் திட்டமிடுவார்கள். ஆக, பட்டங்களைப் பறிப்பதால் ராஜ குடும்பத்துக்கு மேலும் பிரச்சினைகள்தான் ஏற்படும் என ராஜ குடும்பத்தினர் அஞ்சுவதால், மன்னர் சார்லஸ், ஹரி மேகனுடைய பட்டங்களைப் பறிக்கமாட்டார் என்கிறார் Jonathan Sacerdoti.
Image: WPA Pool