ஆவிகளுடன் பேசும் பெண் உதவியுடன் டயானாவுடன் பேசிய ஹரி: பேரனின் செயலைக் கண்டு சிரித்த டயானா
பிரித்தானிய இளவரசர் ஹரி, தான் ஒருமுறை ஆவிகளுடன் பேசும் பெண் ஒருவருடைய உதவியுடன், தன் தாயாகிய இளவரசி டயானாவுடன் பேசியதாக தெரிவித்துள்ளார்.
டயானாவுடன் பேசிய ஹரி
தனது சுயசரிதைப் புத்தகமாகிய ஸ்பேர் புத்தகத்தில் ஹரி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆவிகளுடன் பேசும் பெண் ஒருவரின் உதவியுடன் தான் தன் தாயாகிய இளவரசி டயானாவுடன் பேசியதாகவும், அப்போது, டயானா இங்கே இருக்கிறார் என அந்தப் பெண் கூற, தனது கழுத்து சூடாகியதை உணர்ந்து தன் கண்களில் கண்ணீர் பெருகியதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஹரி.
நீங்கள் எப்படி வாழவேண்டும் என டயானா ஆசைப்பட்டாரோ, அந்த வாழ்க்கையைத்தான் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என டயானா கூறுகிறார் என அந்தப் பெண் கூறியுள்ளார்.
அத்துடன், உங்கள் மனதில் குழப்பம் நிலவுவதை டயானா அறிவார் என்றும், உங்கள் மனதில் பல கேள்விகள் உள்ளன என்பதை டயானா புரிந்துகொண்டுள்ளார் என்றும் கூறிய அந்தப் பெண், அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் சரியான நேரத்தில் கிடைக்கும் என டயானா கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பேரனின் செயலைக் கண்டு சிரித்த டயானா
ஹரியின் மகனும், தன் பேரனுமான ஆர்ச்சியை கண்டதாக கூறிய டயானா, ஒருமுறை, கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த ராணி எலிசபெத்தின் உருவம் கொண்ட பொம்மையை ஆர்ச்சி கைதவறி உடைத்ததுண்டா என கேட்பதாக அந்தப் பெண் கேட்டுள்ளார்.
அது உண்மைதான் என்று கூறிய ஹரி, உடைந்த பொம்மையை ஆர்ச்சி சரி செய்ய முயன்றதாகவும் கூற, அந்த சம்பவம் தன்னை சிரிப்பூட்டியதாக டயானா கூறுவதாக ஆவிகளுடன் பேசும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இளவரசி டயானாவுக்கு, தன் பேரப்பிள்ளைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஹரி சிறுவனாக இருக்கும்போதே டயானா உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |