இளவரசர் ஹரியின் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை: நிபுணர் ஆலோசனை
Harry and Meghan could follow William and Kate’s example after school incident: இளவரசர் ஹரியின் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில், அவர்கள் வில்லியம் கேட் தம்பதியரின் முன்மாதிரியை பின்பற்றலாம் என ராஜ குடும்ப ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், பிரித்தானியா திரும்பிய ஹரி, மேகன் தம்பதியரின் பிள்ளைகளுடைய பாதுகாப்பு தொடர்பில் ஒரு பிரச்சினை எழுந்தது.
ஹரியின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் நடந்த சம்பவம்
அதாவது, ஹரியின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் அருகே, முதுகில் பை மாட்டிய இரண்டு மர்ம நபர்கள் நடமாடியுள்ளார்கள்.

பின்னர், அவர்கள் ஊடகவியலாளர்கள் என்பதும், அவர்களில் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றின் புகைப்படக்கலைஞர் என்பதும் தெரியவந்தது.
பொதுவாக, பிரபலங்களை புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படங்களை ஊடகங்களுக்கு விற்று காசு பார்க்கும் பாப்பராசிகள் என அழைக்கப்படும் தனியார் புகைப்படக்காரர்கள்தான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவார்கள்.
ஆனால், சர்வதேச ஊடகம் ஒன்றின் புகைப்படக்கலைஞர் ஒருவரே, பள்ளி ஒன்றின் அருகே புகைப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதை ஹரி, மேகன் தரப்பு கண்டித்துள்ளது.
ராஜ குடும்ப நிபுணரின் ஆலோசனை
இந்நிலையில், இப்படி பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்க, ராஜ குடும்ப நிபுணரான ஜென்னி பாண்ட், ஆலோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

இப்படி பிள்ளைகளை புகைப்படம் எடுக்க சுற்றும் புகைப்படக்கலைஞர்களைத் தவிர்க்க, இளவரசர் ஹரியும் மேகனும், இளவரசர் வில்லியம் கேட்டின் முன்மாதிரியைப் பின்பற்றலாம் என்று கூறியுள்ளார் ஜென்னி.
இளவரசர் வில்லியமும் கேட்டும், தங்கள் பிள்ளைகளான இளவரசர்கள் ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டுவருகிறார்கள்.
அவர்களைப் போலவே, ஹரியும் மேகனும் அவ்வப்போது தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களை வெளியிட்டால், அவர்கள் முகங்களைப் பார்க்க விரும்புபவர்களின் ஆர்வம் குறையும்.
ரகசியமாக அவர்களை புகைப்படம் எடுப்பதற்கான தேவையும் இல்லாமல் போய்விடும் என்று கூறும் ஜென்னி, ஆகவே, இளவரசர் வில்லியம் கேட் போல, ஹரியும் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடலாம் என்று கூறியுள்ளார்.