லிலிபெட் என்ற பெயர் மேகனை சந்திப்பதற்கு முன்பே ஹரி தன் மகளுக்காக முடிவு செய்த பெயர்... வெளியாகியுள்ள தகவல்
பிரித்தானிய இளவரசர் ஹரி, தனக்கு இரண்டாவதாக பிறந்துள்ள மகளுக்கு லிலிபெட் என பெயர் வைத்துள்ளார். லிலிபெட் என்பது, பிரித்தானிய மகாராணியாருக்கு அவரது தாத்தா வைத்த செல்லப் பெயர்.
அந்த பெயரை வைத்துத்தான் மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் தனது மனைவியை செல்லமாக கூப்பிடுவாராம். இந்நிலையில், தன் கணவர் தன்னை செல்லமாக அழைக்க, தனிப்பட்ட விதத்தில் பயன்படுத்திய அதே பெயரை ஹரி தன் மகளுக்கு வைத்ததால் மகாராணியார் வருத்தப்படுவார் என்ற கருத்து ஒன்று எழுந்தது.
குறிப்பாக, ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தைப் பிரிந்து அமெரிக்காவுக்கு சென்று குடியேறியபின், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியால் குடும்பத்தில் சலசலப்பு உருவானதைத் தொடர்ந்து, மகாராணியாரின் பெயர் ஹரியின் குழந்தைக்கு வைக்கப்பட்டதாலேயே பிரச்சினை பூதாகாரமாக பார்க்கப்பட்டது.
ஆனால், தனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவளுக்கு லிலிபெட் என்ற பெயரை சூட்டுவது என, மேகன் தன் வாழ்வில் வருவதற்கு முன்பே ஹரி முடிவு செய்துவிட்டிருக்கிறார் என தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எப்போதுமே ஹரிக்கும் அவரது பாட்டியாருக்கும் நெருக்கமான பந்தம் இருந்து வந்துள்ளது என்று கூறியுள்ள அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், ஹரி பாட்டியாருடன் மிகவும் நெருக்கமானவர் மட்டுமல்ல, அவர் வளரும்போதும், ஏன் இப்போதும் கூட, தன் ஆழ்மன மற்றும் மிக தனிப்பட்ட விடயங்களை தனது பாட்டியாருடன் பகிர்ந்துகொள்வதுண்டு என்றும் கூறியுள்ளார்.
அதேபோலத்தான், தான் மேகனை சந்திப்பதற்கு வெகு காலம் முன்பே, தனக்கொரு பெண் குழந்தை பிறந்தால் அவளுக்கு மகாராணியாரின் பெயரை வைக்க விரும்புவதாக தன் பாட்டியாரிடமே ஹரி கூறியிருந்ததாகவும், அது மகாராணியாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.
இளவரசர் ஹரி தன் மகளுக்கு லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என
பெயரிட்டுள்ளார்.
தன் மகளுக்கு டயானா என பெயரிட்டதன் மூலம் தன் தாயையும், லிலிபெட் என
பெயரிட்டதன் மூலம் தன் பாட்டியாரையும் கௌரவித்துள்ளார் இளவரசர் ஹரி.