இளவரசி டயானாவின் சிலையை திறக்க இருக்கும் ஹரி வில்லியம்... சிலை திறப்பு நிகழ்ச்சி எங்கு எப்போது நடைபெறுகிறது?
இன்று பிரித்தானிய இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாள்! தங்கள் தாயின் நினைவாக, இளவரசர்கள் வில்லியமும் அவரது தம்பியான ஹரியும், டயானாவின் உருவச் சிலை ஒன்றை கென்சிங்டன் மாளிகையில் உள்ள தோட்டத்தில் திறந்து வைக்க இருக்கிறார்கள்.
இன்று, உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் அந்த சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அந்த நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி மற்றும் டயானாவின் உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. மகாராணியாரோ, இளவரசர் சார்லசோ அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசி டயானாவின் சகோதரரும் இளவரசர்கள் வில்லியம், ஹரியின் மாமாவுமான Earl Spencer, இந்த நிகழ்ச்சி பிரிந்த சகோதார்களான வில்லியமையும் ஹரியையும் ஒன்றிணைக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிலை திறப்பு நிகழ்ச்சிக்குப் பின் வில்லியமும் ஹரியும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தாயின் உருவச்சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்காக இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் புறப்பட்டுவிட்டார்கள். அவர்கள் சீரியஸாக யோசித்தபடி காரில் பயணிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.