கலப்பின பெண்ணான மேகனுக்கு பிறந்ததால் ஹரியின் மகனுக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது... ஓபரா பேட்டியில் பகீர் குற்றச்சாட்டு
கலப்பின பெண்ணான தனக்கு பிறந்ததால், தங்கள் மகன் ஆர்ச்சிக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது என பகீர் குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார் மேகன். சில மணி நேரத்திற்கு முன் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் பிரித்தானிய இளவரசரான ஹரியும் அவரது மனைவியான மேகனும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டி ஒளிபரப்பானது.
அதில், சில அதிரவைக்கும் தகவல்களை ஹரியும் மேகனும் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, மேகன் கர்ப்பமாக இருக்கும்போதே, கலப்பினப்பெண்ணான அவருக்கு பிறக்கும் குழந்தை என்ன நிறத்தில் இருக்கும் என ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக மேகன் தெரிவித்துள்ளார்.
தனது மகன் அதிக பழுப்பு நிறமாக இருந்துவிடுவானோ என அவர் கவலைப்படுவதாகவே தனக்கு தோன்றியதாக மேகன் தெரிவித்துள்ளார்.
ஆனால், அப்படி கூறிய ராஜ குடும்ப உறுப்பினர் யார் என்பதை வெளிப்படுத்த மேகன் மறுத்துவிட்டார். தான் அதைக் கூறினால், தன் கணவரின் குடும்பத்தில் ஒருவரான அந்த நபருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், தன்னால் அதைக் கூற முடியாது என மறுத்துவிட்டார் அவர்.
அத்துடன், தங்கள் மகன் ஆர்ச்சிக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டதாகவும், ராஜ குடும்ப வாரிசான தங்கள் மகனுக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்துவிட்டதாகவும், அந்த விடயம் தங்களுக்கு வேதனையை ஏற்படுத்தியதாகவும் மேகன் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரியும், தனது மகனின் நிறத்தைக் குறித்த அந்த உரையாடல் சகிக்க இயலாததாக இருந்ததாகவும், அந்த விடயத்தைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இனவெறி ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக கருதப்படும் இந்த காலகட்டத்தில், பிரித்தானிய அரணமனை மீது இன ரீதியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


