கனடாவில் குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண்: சமீபத்திய தகவல்
கனடாவில் இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண்
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார்.
பகுதி நேர பணி செய்துவந்த ஹர்சிம்ரத், கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில், ஹாமில்ட்டன் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.
அப்போது அங்கு வந்த ஒரு கருப்பு நிற காரிலிருந்த ஒருவர், சாலையின் மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற காரிலிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அப்போது, அவர் சுட்ட ஒரு குண்டு, பேருந்துக்காக காத்திருந்த ஹர்சிம்ரத்தின் மார்பில் பாய்ந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பியோடிவிட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹர்சிம்ரத், காயங்கள் காரணமாக பலியாகிவிட்டார்.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், ஹர்சிம்ரத் பலியாக காரணமாக இருந்த மோதலில் ஈடுபட்ட கார்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
CCTV காட்சிகளின் அடிப்படையில், ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வடமேற்கு ரொரன்றோவில் குடியிருப்பு பகுதி ஒன்றில் வெள்ளை நிற Hyundai Elantra கார் ஒன்றை பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.
அடுத்தபடியாக, ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, ஹாமில்ட்டனிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், கருப்பு நிற Mercedes SUV ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக Sergeant Daryl Reid என்னும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
என்றாலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இதுவரை சிக்கவில்லை. பொலிசார் அந்த நபரை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.