ட்ரம்புக்கு No சொன்னதால் ரூ 19,000 கோடியை இழந்த புகழ்பூத்த பல்கலைக்கழகம்
அரசாங்கத்திடம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைக்கும் பொருட்டு ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் முன்வைத்துள்ள பல கோரிக்கைகளை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அதிரடியாக நிராகரித்துள்ளது.
வெடித்த யூத எதிர்ப்பு
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு வெளியான சில மணிநேரத்தில், அந்தப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் 2.3 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 19,709 கோடி) பெடரல் நிதியை முடக்குவதாக ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 18 மாதங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களின் போது கல்லூரி வளாகங்களில் வெடித்த யூத எதிர்ப்புக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஹார்வர்டுக்கான 9 பில்லியன் டொலர் பெடரல் ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை மறுபரிசீலனை செய்வதாக ட்ரம்ப் நிர்வாகம் கடந்த மாதம் கூறியதை அடுத்து தற்போது இந்த நிதி முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டு, தங்கள் வளாகத்தில் யூத எதிர்ப்புக்கு ஆதரவளிப்பதாக கல்வித் துறையின் பணிக்குழுவால் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகரம், ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் உலகின் சில பணக்கார பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான உயர்மட்டப் பிரச்சினையை அதிகரிக்க செய்ததுடன், பேச்சு மற்றும் கல்விச் சுதந்திரம் குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகமானது ஏராளமான பல்கலைக்கழகங்களுக்கான பெடரல் நிதியில் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை முடக்கியுள்ளது. கல்வி வளாகங்களில் கொள்கை மாற்றங்களுக்கு அழுத்தமளிப்பதும், யூத எதிர்ப்புக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள சில வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக நாடு கடத்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆணையிட முடியாது
இந்த நிலையில், ஹார்வர்ட் தலைவர் ஆலன் கார்பர் திங்களன்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில், கடந்த வாரம் கல்வித் துறையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், பெடரல் அரசாங்கம் ஹார்வர்ட் சமூகத்தைக் கட்டுப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் தொடர்பிலும் அவர் அந்த வெளிப்படுத்தியிருந்தார்.
மட்டுமின்றி, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, எந்த அரசாங்கமும் தனியார் பல்கலைக்கழகங்கள் என்ன கற்பிக்கலாம், யாரை சேர்த்து வேலைக்கு அமர்த்தலாம், எந்தெந்த படிப்பு மற்றும் விசாரணைப் பிரிவுகளைத் தொடரலாம் என்பதை ஆணையிட முடியாது என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கல்லூரி வளாகங்களில் யூத எதிர்ப்புப் பிரச்சினை வெடித்தது. 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படைகள் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து பல பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டு பாலஸ்தீன சார்பு மாணவர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதனிடையே, கடந்த வாரம், ஹார்வர்ட் பேராசிரியர்கள் குழு ஒன்று, அந்தப் பள்ளிக்கு வழங்கப்பட்ட கிட்டத்தட்ட 9 பில்லியன் டொலர் பெடரல் ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை ட்ரம்ப் நிர்வாகம் மறுஆய்வு செய்வதைத் தடுக்க வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |